தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்

ஈரோடு, ஜன. 11:  மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம் என்ற முழக்கத்தை முன்னிறுத்தியும், தமிழகத்தின் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் என்ற மையக்கருத்தை வலியுறுத்தும் வகையில் அனைத்து ஊராட்சிகளிலும் திமுக., சார்பில் பொதுமக்களை சந்திக்கும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடக்கும் என ஏற்கனவே தலைமைக்கழகம் அறிவித்திருந்தது. இதன்படி மாநிலம் முழுவதும் நேற்று ஊராட்சி சபை கூட்டங்கள் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட லக்காபுரம் ஊராட்சி, கஸ்பாபேட்டை ஊராட்சி, ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எலவமலை ஊராட்சி மற்றும் கூரபாளையம் ஊராட்சிகளில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடந்தன. இக்கூட்டத்திற்கு திமுக., தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார்.    இதில் கலந்து கொண்ட திமுக., பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது: ஆளுங்கட்சி எம்எல்ஏ.,க்கள் மக்களை தேடி செல்வது இல்லை. ஓட்டு வாங்க சென்றதோடு சரி அதற்கு பிறகு ஓட்டு போட்ட மக்களின் நிலை பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல் உள்ளனர். எனவே தான் எதிர்கட்சியாக உள்ள திமுக., மக்களை தேடி செல்கிறோம். அண்ணாவின் கூற்றுப்படி மக்களை சந்திக்க செல்லுங்கள், மக்களிடம் பேசுங்கள், மக்களோடு மக்களாக உண்டு உறங்குங்கள் என்று கூறினார். அண்ணாவின் கருத்தினை நிறைவேற்றும் வகையில் தற்போது திமுக., தலைவர் ஸ்டாலின் தலைமையில், எம்எல்ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் என ஒவ்வொருவரும் மக்களை தேடி செல்கின்றனர். இந்தியாவிலேயே இது போன்ற ஒரு திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மகத்தான ஒரு திட்டத்தை ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்.

  தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். ஆட்சி பொறுப்பேற்ற ஒரு மணி நேரத்திற்குள் உங்கள் குறைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். ஆளுங்கட்சியினர் மக்களை சந்திக்காமல் ஓட்டுக்கு பணம் கொடுத்து வாங்கி விடலாம் என்று நினைக்கின்றனர். மக்கள் பணத்திற்காக மட்டுமே ஓட்டு போடுவதாக இருந்தால், ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் தொடர்ந்து ஆட்சியில் அல்லவா இருந்து கொண்டு இருக்க வேண்டும். மக்களின் மனங்களில் வெறுப்பு வந்துவிட்டால், பணம் கொடுத்தாலும் ஓட்டு பெற முடியாது. இனி ஈரோடு மாவட்டத்திற்கான முழு பொறுப்பு முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு அவர் உங்களுக்கு வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், ஆதரவாகவும் இருப்பார். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

Related Stories: