பொங்கல் விடுமுறைக்கு பின் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி வகுப்பு அட்மிஷன்

கோவை, ஜன. 11: தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி வகுப்பிற்கான அட்மிஷன் பொங்கல் விடுமுறைக்கு பின் வரும் 18ம் தேதி முதல் துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் செயல்படும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி., யுகேஜி., வகுப்புகளை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், 52 ஆயிரத்து 933 குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க ஒரு பெண் ஆசிரியையை நியமிக்க வேண்டும். பெண் ஆசிரியர் இல்லை என்றால் உபரியாக உள்ள ஆண் ஆசிரியர்களை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்கள், ஒரு நாளைக்கு 2 மணி நேரம் குழந்தைகளுக்கு பாடங்கள் நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி வகுப்புகள் துவங்குவது, மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பிரன்சிங் முறையில் நடந்தது. சென்னையில் இருந்து கல்வித்துறை செயலர், சமூகநலத்துறை முதன்மை செயலர் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், திட்ட அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினர். இதில், நடுநிலைப்பள்ளிகளில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் உபரி ஆசிரியர்கள், சீனியர் ஆசிரியர்களை வரும் 18ம் தேதிக்குள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கழிப்பறை, பாதுகாப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து தொடக்க கல்வி இயக்குனர் அங்கன்வாடி பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆசிரியர்கள் 18ம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும். பள்ளியின் தலைமை ஆசிரியர், பிற ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்களுடன் சேர்ந்து உள்ளூர் பொதுமக்களை அணுகி எல்கேஜி., யுகேஜி., வகுப்புகளுக்கு குழந்தைகளை சேர்க்க வலியுறுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் பெயர் பலகை வைக்க வேண்டும். சேர்க்கப்பட்ட குழந்தைகளை வயது அடிப்படையில் பிரித்து யுகேஜி., எல்கேஜி., வகுப்பில் சேர்க்க வேண்டும். இவர்களுக்கு தனி கால அட்டவணை தயாரித்து பராமரிக்க வேண்டும். இந்த மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் தயார் செய்யப்பட்டு வழங்கப்படவுள்ளது. எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை துவங்கி குழந்தைகளை சேர்க்கை செய்ய வேண்டும். மேலும், வரும் 26ம் தேதி பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி, எல்கேஜி., யுகேஜி., வகுப்புகள் சேர்க்கை குறித்து விவாதிக்க வேண்டும் என தொடக்க கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவர்களுக்கும் தெரிவித்துள்ளார்.   இதன் காரணமாக பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி வகுப்புகளுக்கான அட்மிஷன் துவங்கும் என தெரிகிறது. கோவை மாவட்டத்தில் நடுநிலைப்பள்ளிகளில் செயல்படும் 122 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி சேர்க்கை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: