நெற்பயிரை நோய்களிலிருந்து பாதுகாக்க விதைநேர்த்தி செய்ய வேண்டும்

ஈரோடு, ஜன. 11:  நெற்பயிரைத் தாக்கும் நோய்களிலிருந்து பாதுகாக்க முன்கூட்டியே மருந்துகள் மூலம் விதை நேர்த்தி செய்து விதைக்குமாறு வேளாண் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.   இது குறித்து கோபி வேளாண்மை உதவி இயக்குநர் ஆசைத்தம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெற்பயிரைத் தாக்கும் நோய்கள் பெரும்பாலும் காற்று, பாசனநீர், விதைகள் ஆகியவற்றின் மூலமே பரவுகின்றன. இதில் எச்சரிக்கையாக விதை மூலம் நோய்கள் பரவுவதைத் தடுக்க முன்கூட்டியே விதை நோ்த்தி செய்ய வேண்டும். விதை நோ்த்தி செய்வதால் விதை அழுகல், வோ் அழுகல், நாற்று அழுகல், குலைநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களிலிருந்து 40 நாட்கள் வரை பயிருக்கு பாதுகாப்புக் கிடைக்கிறது. முளைப்புதிறன் மேம்படுகிறது. போதுமான பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட்டு அதிக விளைச்சல் கிடைக்கிறது. விதைகளின் மீது பரவி இருக்கும் பூஞ்சான வித்துக்களை நீக்குவதாலும், விதைகள் முளைப்பதற்கு முன்பாகவே மண் மூலம் பரவும் கிருமிகளின் தாக்குதலிலிருந்து விதைகளை பாதுகாப்பதாலும் செழிப்பான, நோயற்ற பயிர்களை பெறலாம். விதை நோ்த்தி செய்வதற்கு ரசாயன மருந்துகள் தவிர நன்மை செய்யும் பூஞ்சானங்களும், நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் உயிரியில் மருந்துகளாக பயன்படுத்தப்படுகின்றன.

   கடந்த சம்பா பருவத்தில் நெற்பயிர்களை நெற்பழ நோய், குலைநோய், இலைப்புள்ளி நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கியதால் விவசாயிகள் அதிகமாக மருந்து தெளிக்க நோ்ந்தது.இந்த நோய்கள் அனைத்தும் அதிகமாக விதை மூலம் பரவக் கூடியதாகும். எனவே பின்வரும் முறைகளில் விதை நோ்த்தி செய்து பயன்பெறலாம்.  நெல் விதைகளை ‘கார்பன்டாசிம்” அல்லது ‘டிரைசைக்ளோஜோல்” இதில் ஏதேனும் ஒரு மருந்தை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின்பு நீரில் ஊறவைக்கலாம். அல்லது ‘சுடோமோனாஸ்” என்ற நன்மை செய்யும் பாக்டீரியாவை ஒரு கிலோ விதைக்கு 11 கிராம் என்ற அளவில் கலந்து ஒரு நாள் வைத்திருந்து பிறகு நீரில் ஊற வைக்கலாம். இதன் மூலம் நெற்பயிரை தாக்கும் பல்வேறு நோய்களிலிருந்து பயிரை பாதுகாக்க வாய்ப்பு ஏற்படுகிறது. இவ்வாறு கோபி வேளாண்மை உதவி இயக்குநர் ஆசைத்தம்பி தெரிவித்தள்ளார்.

Related Stories: