ஈரோட்டில் கருணாநிதி சிலை அமைக்க கட்டுமான பணிகள்

ஈரோடு, ஜன.11:   ஈரோட்டில் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட உள்ளதையடுத்து இதற்கான கட்டுமான பணிகளை திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
 மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு ஈரோட்டில் முழு திருவுருவ சிலை அமைக்க ஈரோடு தெற்கு மாவட்ட திமுக., சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 25வது வட்டம், முனிசிபல் காலனியில் கட்சிக்கு சொந்தமான இடத்தில் முழு உருவ சிலை வைக்கப்பட உள்ளது. இதன் திறப்பு விழா வரும் 30ம் தி நடக்கிறது. சிலையை திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

 தமிழகத்தில் அண்ணா அறிவாலயத்திற்கு பிறகு வெளியிடத்தில் கருணாநிதிக்கு திறக்கப்படும் முதல் சிலை திறப்பு என்பதால், மாநிலம் முழுவதும் உள்ள திமுக.,வினர் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். இதையடுத்து விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சிலை திறக்கப்பட உள்ள இடத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். பணிகளை விரைந்து முடிக்கவும், திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்தும் கட்சி மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்டறிந்தனர்.


× RELATED அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலைக்கு கீழ் கி.வீரமணி மரியாதை