மக்கள் பணம் பலகோடி கொள்ளை ரூ.500 நாட்டுக்கோழியை ரூ.6500க்கு தருகிறார்கள் திமுக தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பேச்சு

காரைக்குடி, ஜன.11 : தமிழக அரசு வழங்குவதாக அறிவித்துள்ள நாட்டுகோழி வழங்கும் திட்டத்தில் பலகோடி வரை கொள்ளை அடிக்க உள்ளது என திமுக தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சேகர் தெரிவித்தார் காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் சாக்கோட்டை ஒன்றிய திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சின்னதுரை வரவேற்றார். முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ சுபதுரைராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தை துவக்கி வைத்து தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான சேகர் பேசுகையில், ‘‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் செல்வோம், சொல்வோம், வெல்வோம் என தெரிவித்ததின்படி ஒவ்வொரு கிராமங்களிலும் ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இங்கு தெரிவிக்கப்படும் மக்கள் குறைகள் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக நிறைவேற்றி தரப்படும். மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனவுடன் கிராம முன்னேற்றம் தான் முதல் கையெழுத்தாக இருக்கும். மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. ஆனால் மாநில அரசு மத்தியஅரசுக்கு துணைபோகிறது. 3 வருடமாக கொள்ளை அடித்த பணத்தை மூடிமறைக்க பொங்கல் பணம் ரூ 1000 வழங்குகின்றனர். அதேபோல் 75 ஆயிரம் பேருக்கு ரூ.50 கோடியில் நாட்டுக்கோழி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். அப்படிபார்த்தால் நபர் ஒருவருக்கு ரூ.6500 க்கு கோழி வழங்குகின்றனர். ரூ 500க்கும் விற்பனையாகும் கோழியை ரூ.6500க்கு கொடுத்து மக்கள் பணத்தை கொள்ளையடிக்க உள்ளனர். சத்துணவு முட்டையில் 2400 கோடி என ரூ.10 ஆயிரம் கோடி வரை கொள்ளை அடித்துள்ளனர். கிராம வளர்ச்சி, மக்களுக்காக போராட்டம் நடத்தும் ஒரே இயக்கம் திமுக தான்’’ என்றார். இதில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் அரியக்குடி, சங்கராபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் திமுக ஊராட்சி சபை கூட்டங்கள் நடந்தது.


× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம...