அறிவியலில் சாதனை பின்லாந்து செல்லும் காரைக்குடி மாணவர்கள்

காரைக்குடி, ஜன. 11: அறிவியலில் சாதனை புரிந்து காரைக்குடி எஸ்எம்எஸ் பள்ளி மாணவர்கள் தமிழக அரசு சார்பில் பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கவும், சேர்க்கையை உயர்த்தவும் பள்ளிகல்வித்துறை சார்பில் கலை, இலக்கியம், அறிவியல் கண்டுபிடிப்புகளில் சிறந்த விளங்கு மாணவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் முதல்முறையாக துவங்கப்பட்டுள்ளது. இதன்படி 8 முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவர்கள் ஏதாவது ஒருபிரிவில் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற 100 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். தற்போது முதல்கட்டமாக 50 பேர் தேர்வு செய்யப்பட்டு பின்லாந்து, சுவீடன் நாட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர். இம்மாதம் 20 முதல் 30ம் தேதி வரை 10 நாட்கள் இந்த நாடுகளில் உள்ள பல்கலைக்கழகம், கல்வி முறை, கலாச்சாரம், அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்பட பல்வேறு துறைகளை பார்வையிடுவார்கள். பின்லாந்தில் 5 நாட்களும், சுவீடனில் 5 நாட்களும் இருப்பார்கள். இம்மாணவர்களுக்கான முழுசெலவையும் அரசே செய்யவுள்ளது.  தமிழக அளவில் 50 மாணவர்களில் காரைக்குடி எஸ்எம்எஸ் அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் கோல்ட்ஸ்டில்லர், கார்த்திகேயன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வான மாணவர்களை பள்ளி மெய்யப்பன், நிர்வாக குழு சக்திதிருநாவுக்கரசு, ஆட்சிமன்ற குழு செயலாளர்கள் பெரியண்ணன், முத்துபழனியப்பன், தலைமைஆசிரியர் வள்ளியப்பன், ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆகியோர் பாராட்டினர்.

கோல்ட்ஸ்டில்லர் கூறுகையில், ‘வெளிநாடு செல்லவுள்ளது மகிழ்ச்சியாக உளது. உடல்நலம், சுகாதாரம், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை உள்பட பல்வேறு தலைப்புகளில் ஆய்வு செய்து அறிவியல் மாநாட்டில் சமர்ப்பித்தேன். தவிர என்னுடை பல ஆய்வு கட்டுரைகள் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கோவையில் நடந்த மாநில அளவிலான தூய்மை இயக்க குறித்த கட்டுரை முதல் இடம் பெற்றுள்ளது. தவிர வினாடி, வினா போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளேன்’’ என்றார்.


× RELATED திருவாரூர்- காரைக்குடி அகலபாதையில் கேட் கீப்பர்களை பணியமர்த்த வேண்டும்