மானாமதுரையில் உயிர்பலி வாங்கும் ரயில்வேகேட் பாதுகாப்பு தடுப்புகள் சீரமைக்கப்படுமா?

மானாமதுரை, ஜன.11:  மானாமதுரையில் சிவகங்கை மெயின் ரோட்டில் உள்ள சிப்காட் ரயில்வே கேட்டின் பாகங்கள் கழன்று விழுந்தும் காங்கிரீட் தடுப்புகள் சேதமடைந்தும் உள்ளதால், ரயில் வரும்போது பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மானாமதுரை சிப்காட் மெயின் ரோட்டில் சிவகங்கை செல்லும் வழியில் ரயில்பாதை குறுக்கிடுவதால், மானாமதுரை துணை மின்நிலையம் அருகே ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மானாமதுரை வழியாக தினமும் 14 ரயில்களும், வாராந்திர ரயில்கள், இந்திய சுற்றுலா கழக சிறப்பு ரயில்கள், சரக்கு ரயில்கள் என ஏராளமான ரயில்கள் செல்கின்றன. இதனால் தினமும் 20 முறைக்கு மேல் ரயில்வே கேட் மூடப்படுகிறது. ரயில் வரும் நேரங்களில் 10 நிமிடத்திற்கு மேல் ஆகும்போது இந்த கேட்டில் காத்து நிற்கும் பாதசாரிகள் பலர் ரயில்பாதையை துணிச்சலாக கடந்து செல்கின்றனர். ரயில்வே கேட் பாதுகாப்பிற்கு போடப்பட்ட சிமென்ட் காங்கிரீட் தடுப்புகள் சேதமடைந்தும், ரயில்வே கேட்டின் ஒரு பகுதி துண்டாகி உள்ளதால் தண்டவாளத்தை பாதசாரிகள் சர்வ சாதாரணமாக கடந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த விஜயா(30) ரயில்வே கேட்டை கடந்து சென்றபோது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இங்குள்ள கேட் முறையான பராமரிப்பின்றி இருப்பதால் அடிக்கடி திறந்து மூட முடியாமல் சிக்கி கொள்கிறது. இதனால் சிக்னல் கிடைக்காமல் ரயில் நிற்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் அரைகுறையாக கேட் அப்படியே நிற்பதால் கேட்டை கடந்து செல்ல முடியாத வாகனங்கள் பழைய படி திரும்பி கல்குறிச்சி கேட் வழியாக அல்லது கொன்னக்குளம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த பெருமாள் கூறுகையில், ரயில்வே கேட்டில் பக்கவாட்டில் உள்ள காங்கிரீட் தடுப்புகள் உடைந்துபோய் உள்ளதால், அதன்வழியாக பொதுமக்களும், கால்நடைகளும் செல்வதால் ரயிலில் அடிபட்டு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே காங்கிரீட் பழைய இரும்பு கேட்டை மாற்றி புதிதாக அமைப்பதன் மூலம் விபத்துகள், வாகன போக்குவரத்து முடக்கத்தை தவிர்க்க முடியும் என்றார்.


× RELATED மானாமதுரை பயணிகளுக்கு இடம்...