பிளாஸ்டிக் பொருள் தடைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் கலெக்டர் வலியுறுத்தல்

சிவகங்கை, ஜன.11:  சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப் பொருட்கள் பயன்படுவத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தலைமை வகித்து கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது: ஜன.1 முதல் தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் பார்சல் செய்வதற்கான செலவு வரும் காலங்களில் முற்றிலும் குறைந்து விடும். பிளாஸ்டிக் தடை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதற்கேற்ப உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் சிரமத்தை கருத்தில் கொள்ளாமல் வாடிக்கையாளர்கள் கட்டாயம் பாத்திரம், துணிப்பைகள் எடுத்து வரவேண்டும் என அறிவுறுத்த வேண்டும். இதற்காக மாவட்ட நிர்வாகம் வியாபாரிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளது. மகளிர் திட்டம் மூலம் சுயஉதவிக் குழுக்கள் தேவையான துணி பைகளை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் வழங்க தயாராக உள்ளனர். அதைப் பெற்றுக்கொள்ளலாம். தடை செய்யப்பட்ட பொருட்களை வியாபாரிகள் பயன்படுத்த வேண்டாம். கடையில் ஆய்வு செய்யும் போது தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்தால் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அபராதம் வசூல் செய்ய உத்தரவிட வில்லை. அவ்வாறு அபராதம் வசூல் செய்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவும். பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகளை கருத்தில் கொண்டு அரசு தடை செய்துள்ளது. எனவே எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு பேசினர். கூட்டத்தில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் அருள்மணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


× RELATED விவசாயிகளை பாதிக்கும் அனைத்து...