காரைக்குடி 21வது வார்டில் தொட்டியின் வெளியே கொட்டப்படும் குப்பைகள் காலை வரை ‘கப்’ தாங்க முடியல...

காரைக்குடி, ஜன. 11:  காரைக்குடி 21வது வார்டில் தொட்டிக்கு வெளியே கொட்டப்படும் குப்பைகால் கடும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். காரைக்குடி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் குப்பை சேகரிக்கும் பணி நகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடு, வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள டம்பர் பிளேசர் பின்களில் கொட்டி செல்வார்கள். அதனை நகராட்சி வாகனங்கள் மூலம் ஒவ்வொரு பகுதியிலும் சேகரித்து தேவகோட்டை ரஸ்தா பகுதியில் உள்ள குப்பைகிடங்கில் கொட்டப்படுகிறது. இதன்படி 21வது வார்டுக்கு உட்பட்ட அரு.அ.வீதி மற்றும் க.அள.ராம வீதி சந்திக்கும் பகுதியில் நகராட்சி சார்பில் டம்பர் பிளேசர் பின் வைக்கப்பட்டுள்ளது.இதில் சுற்றுப்புற பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பணியாளர்கள் கொட்டி வருகின்றனர். தவிர தொட்டியை சுற்றியும் குப்பைகளை கொட்டுகின்றனர். இக்குப்பைகள் மறுநாள் காலை 6 மணிக்கு மேல் நகராட்சி வாகனத்தில் வந்து எடுத்து செல்கின்றனர். அதுவரை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதி மக்கள் கடும் துர்நாற்றத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது. தவிர சாலையை மறித்து குப்பைகள் குவிந்து கிடப்பதால் அச்சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குப்பைகளில் உள்ள கழிவுகளை சாப்பிட மாடு, நாய்கள் முகாமிட்டுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுடுகிறது.

அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இரண்டு வீதி சந்திக்கும் பகுதியில் குப்பை சேகரிக்கும் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வீதியின் உள்ளே நுழையும் போதே துர்நாற்றத்துடன் தான் வரவேண்டும். சாலையை மறித்து நடுத்தொருவில் குப்பையை போட்டு வைத்துள்ளதால் யாரும் உள்ளே வரவோ, வெளியே செல்லவோ முடியாத நிலை உள்ளது. மாடு, நாய்கள் குப்பையை சுற்றி நின்றுகொள்வதால் நகரபஸ்கள் செல்லவும் தடையாக உள்ளது.கடும் துர்நாற்றத்தால் தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. தெருவிளக்கு 3 ஆண்டுகளாக எரியாமல் உள்ளது. 2 வருடங்களுக்கு மேலாக கழிவுநீர் கால்வாய் சுத்தப்படுத்தப்படாமல் உள்ளது. பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் பாராமுகமாய் உள்ளனர். இதேநிலை தொடர்ந்தால் இப்பகுதி மக்களை திரட்டி நகராட்சி அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும்’’ என்றனர்.

× RELATED சிவகாசி 7வது வார்டில்வாகன ஓட்டிகள், பள்ளி மாணவிகள் கடும் அவதி