தரமில்லாத தண்ணீரால் நோய் பாதிப்பு சுத்திகரிப்பு உபகரணங்களுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சிவகங்கை, ஜன. 11: சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் தொட்டிகளுடன் சுத்திகரிப்பு உபகரணங்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் ஒன்றிய கண்மாய்கள் 4 ஆயிரத்து 871, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 968கண்மாய்கள் உள்ளன. அத்துடுன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில், பெரும்பாலான கிராமங்கள், பேரூராட்சிகளில் குளத்து நீரே குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் டிசம்பர் மாதத்தில் அனைத்து நீர் நிலைகளும் நிறைந்து காணப்படும். நவம்பரில் மழை பெய்வது முடிவடைந்து மீண்டும் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் மட்டுமே மழை தொடங்கும் என்பதால் குளங்கள், கண்மாய்களில் இருக்கும் நீர் ஆறு மாத தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
கடந்த 2018ம் ஆண்டில் 924மி.மீ மழை பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டுகளில் நிலவிய கடும் வறட்சி, கடந்த ஆண்டு அடித்த வெயிலால் இருந்த நீரும் விரைவாகவே வற்றியது. இதனால் தற்போது பெரும்பாலான குளங்கள், கண்மாய்கள் முழுமையாக வறண்டு காணப்படுகிறது. சில நீர் நிலைகளில் மட்டுமே சிறிதளவு நீர் காணப்படுகிறது. இந்த நீரும் இன்னும் குறைவான நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும். இதனால் கோடையில் வறட்சி பாதிப்பு ஏற்படும்.

உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து இடங்களிலும் ஆழ்குழாய்(போர்வெல்) சிறு மின் விசை பம்பு அமைக்கப்படுகிறது. ஒரே தெருவில் இரண்டு, மூன்று ஆழ்குழாய் கூட அமைக்கின்றனர். ஆனால், இந்த நீரை யாரும் குடிநீருக்கு பயன்படுத்த முடியாது. நேரடியாக இந்த நீரை குடிநீராக பயன்படுத்தினால் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதற்கு குளத்து நீரே பராவாயில்லை என்ற நிலையிலேயே அதை அருந்தி வருகின்றனர். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தொட்டிகள் மட்டுமல்லாது புதிதாகவும் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படுகிறது. நேரடியாக குடிநீராக பயன்படுத்த முடியாத நிலையில் குடிநீர் தொட்டியுடன் சுத்திகரிப்பு உபகரணங்கள் இணைத்தே அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: உள்ளாட்சி சார்பில் அமைக்கப்படும் ஆழ்குழாய் நீர் தொட்டிகள் உப்பு அல்லது உவர்ப்பாக குடிநீராக பயன்படுத்தும் நிலையில் இல்லை. மேலும் இந்த நீரை சுத்திகரிக்காமல் நேரடியாக குடிநீராக பயன்படுத்தினால் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் யாரும் இந்த நீரை குடிப்பது இல்லை. குளங்கள் வற்றி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் ஆழ்குழாய் அமைத்து தருகிறோம் எனக்கூறி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் பல இடங்களில் போரில் நீர் இல்லாமல் ஆழ்குழாய் அமைக்கப்பட்ட தொட்டிகள் காட்சி பொருளாக உள்ளன. இயங்கும் இடங்கள் எங்கும் குடிநீருக்கு பயன்படுவது இல்லை. ஆழ்குழாயுடன் நிலையான சுத்திகரிப்பு உபகரணங்களும் அமைக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் மீண்டும், மீண்டும் ஆழ்குழாய் மட்டும் அமைக்கின்றனர். இனி புதிய ஆழ்குழாய் அமைக்காமல் ஏற்கனவே உள்ளவைகளில் சுத்திகரிப்பு உபகரணங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


× RELATED கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு...