கள் இறக்க அனுமதிக்க வேண்டும் பனை தொழிலாளர்கள் வலியுறுத்தல்

ராமநாதபுரம், ஜன.11: ராமநாதபுரம் மாவட்டத்தில் இடம் பெயர்ந்த பனைத் தொழிலாளர்கள் குடும்பங்களின் நிலை குறித்தான ஆய்வு அறிக்கை வெளியீட்டு விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது. மாநில பனை தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் சங்கத்தின் தலைவர் முனியசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் ரவி, ஒருங்கிணைப்பாளர் சாத்தையா முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் கவுரி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சுப்பையா ஆய்வு அறிக்கையை வெளியிட ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பனைவெல்ல கூட்டுறவு விற்பனை சம்மேளன தலைவர் பாலசிங்கம் பெற்றுக்கொண்டார். ஆய்வில் பனை தொழிலாளிகள் வருடத்திற்கு 8 மாதங்கள் தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து பனைத்தொழில் செய்து வருகின்றனர். மற்ற நாட்களில் வருமானம் ஏதும் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளில் கல்வி, உடல் ஆரோக்கியம் சுகாதார மேம்பாடு இல்லாமல் சிரமப்படுகின்றனர்.

பனை தொழில் செய்பவர்கள் உற்பத்தி செய்யும் கருப்பட்டிக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கத்தின் மூலமாக எளிய தவணை முறையில் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். அரசின் புறம்போக்கு நிலங்களில் பனைத்தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும். பனைமர கள் இறக்க அனுமதிக்க வேண்டும், காடுகளில் தங்கியிருக்கும் தொழிலாளிகள் மற்றும் குடும்பங்களுக்கு வாரம் ஒரு முறை நடமாடும் மருத்துவ சேவை மூலமாக மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டும் போன்ற பரிந்துரைகள் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

× RELATED பதனீர் இறக்க அனுமதி மறுப்பு பனை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு