அரண்மனை பகுதியில் குப்பைகள் துர்நாற்றத்தால் நடமாட முடியவில்லை நகராட்சி மீது குற்றச்சாட்டு

ராமநாதபுரம், ஜன.11: ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் முறையாக குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள குப்பை தொட்டிகளில் உள்ள குப்பைகளை நகராட்சி பணியாளர்கள் முறையாக அள்ளுவது கிடையாது. குப்பைகள் கொட்டப்படும் இடத்திற்கு அருகில் குடியிருப்பு வீடுகள், தபால் நிலையம், வங்கிகள், கடைகள் என பல உள்ளதால் அப்பகுதியில் சுற்றுப்புற சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. தொட்டிகளில் சேரும் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் குப்பை தொட்டிகளுக்கு அருகிலேயே குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதி வழியாக செல்லும் நபர்கள் மூக்கை பிடித்தபடி தினமும் நடந்து செல்ல வேண்டியுள்ளது. டிராபிக் ஜாம் ஏற்படும்போது டூவிலர் செல்வோர் பலமுறை குப்பைகளின் மேல் ஏறி வழுக்கி விழந்துள்ளனர். இப்பிரச்னை தடுக்க நகராட்சி நிர்வாகத்தினர் அப்பகுதியில் சேரும் குப்பைகளை தினந்தோறும் அள்ள ஏற்பாடு செய்ய வேண்டுமென்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அப்பகுதியை சேர்ந்த குமார் கூறுகையில், அவ்வப்போது இந்த குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. துர்நாற்றம் காரணமாக யாரும் அப்பகுதியில் நடமாட முடியவில்லை. இதுதவிர குப்பைகள் சேருவதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவி வருகிறது. சேரும் குப்பைகளை உடன் அகற்ற நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை வேண்டும் என்று கூறினார்.

× RELATED வைகையில் குப்பைகள் அகற்றம் மாநகராட்சி நடவடிக்கை