கோயில் கோபுரத்தில் செடிகொடிகள் வருமானம் அதிகரித்தும் பராமரிக்க வில்லை பக்தர்கள் வேதனை

ராமநாதபுரம், ஜன.11: ராமநாதபுரம் அருகே ரணபலி முருகன் கோயிலில் பராமரிப்பு இல்லாததால், கோபுரங்களில் செடிகள் வளர்ந்து வருகின்றன. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் அருகே தெற்குபெருவயல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரணபலி முருகன் கோயில் உள்ளது. தினந்தோறும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக அங்கு வருவது வழக்கம். கடந்த பல வருடங்களாக முருகன் கோயில் சுகாதார சீர்கேட்டால் சிக்கி தவிக்கிறது. கோயில் வளாகத்தை சுற்றிலும் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் கல்தூண்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கோயில் உட்பகுதியில் உள்ள கோபுரங்கள், கட்டிடங்களில் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.  கோயிலை முறையாக பராமரிக்க நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து பக்தர் பாலகுரு கூறுகையில், முருகனின் அருள் வேண்டி பக்தர்கள் பலர் கோயிலுக்கு வருகின்றனர். கோயிலுக்கு நன்கொடை, உண்டியல்  என பல வகைகளில் வருமானம் வருகிறது. இருப்பினும் கோயிலை முறையாக பராமரிக்காமல் நிர்வாகத்தினர் அலட்சியமாக உள்ளனர். இதனால் நாளைடைவில் பக்தர்களின் வருகை குறைய வாய்ப்புள்ளது. விரைவில் கோயிலை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

× RELATED ரஜினி கட்சி துவங்குவது தெய்வத்தின்...