பொதுதேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றும் வகுப்பறையின்றி மரத்தடியில் பயிலும் அவலம் î கலெக்டரிடம் கூறியும் பயனில்லை î தரம் உயர்த்துவதில் தாமதம் î குறையும் மாணவர் எண்ணிக்ைக

ராமநாதபுரம், ஜன.11: ராமநாதபுரம்  அருகே தொருவளூர் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த இப்பள்ளியில் தற்போது 122 மாணவ,மாணவிகள் படிக்கின்றனர். 5 ஆசிரியர், ஒரு தலைமை ஆசிரியர், 4 அலுவலர்கள் என 10 பேர் பணியாற்றி வருகின்றனர். பள்ளியை  சுற்றியுள்ள சிறிய கிராமங்களில் இருந்து அதிகளவு மாணவர்கள் படித்து வருகின்றனர்.  பல ஆண்டுகளாக உயர்நிலை பள்ளியாக உள்ள நிலையில்,  மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தும் இன்னும் நிறைவேற வில்லை. பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகள் இல்லாததால் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி வளாகத்தின் முன்புறம் உள்ள இரண்டு வகுப்பறை கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. ஊராட்சி நிர்வாகம் மோசமான நிலையில் இருந்த வகுப்பறை கட்டிடத்தை இடித்து விட்டனர். தற்போது போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் படித்து வருகின்றனர். இடப்பற்றாக்குறை காரணமாக லேப் கூடத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளியின் விளையாட்டு மைதான  காம்பவுண்ட் சுவர் இ்ல்லாததால் பாதுகாப்பு இல்லாமல் திறந்த வெளியாக உள்ளது. இதனால் அப்பகுதியில் இரவு நேரத்தில் திறந்த வெளி மதுபாராகவும், கழிப்பறையாகவும் சிலர் பயன்படுத்தி வருகின்றனர். மைதானத்தை சுற்றி பாட்டில்களும் சுகாதாரக்கேட்டை விளைவிக்கும் வகையில் அசுத்தமாக உள்ளதால், மாணவர்கள் விளையாட்டு மைதானம் செல்லவே தயங்குகின்றனர்.

மாணவர்களுக்கு கபடி, கோகோ பயிற்சி அளிக்கப்படுகிறது. விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும் போதிய வசதிகள் இல்லாமல் அவர்களின் திறமையை காட்ட முடியாமல் தவிக்கின்றனர். மாணவர்கள் அனைவருக்கும் மதிய உணவு இடைவேளையின் போது, நாட்டு நடப்புகள், பொது அறிவு தொடர்பான விசயங்கள் கூறப்படுகிறது. 6ம் வகுப்பு மாணவர்களுக்கு அகண்ட திரை அமைத்து கம்ப்யூட்டர் மூலம்  ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு  10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்துள்ளார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் 100%, கடந்த ஆண்டு  97% தேர்ச்சியை மாணவர்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மாவட்ட அளவில் காமராஜர் விருதை இப்பள்ளி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளி பற்றி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தன் கூறுகையில், 50 ஆண்டுகளுக்கு மேலான இப்பள்ளியில் காலத்திற்கு ஏற்ப மாணவர்கள் படிக்க போதிய வசதிகள் இல்லை. சேதமடைந்த வகுப்பறையை இடித்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. இன்று வரை அரசு கட்டித்தர வில்லை. விளையாட்டு மைதானம் பெயருக்குதான் உள்ளது. மாணவர்கள் விளையாட்டு பயிற்சி செய்ய கருவிகள் இல்லை. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பல மாணவர்கள் படிக்க வருகின்றனர். அவர்களுக்கு முறையாக அமர்ந்து படிக்க, பொது அறிவை வளர்த்துக் கொள்ள தேவையான கட்டமைப்புகள் இல்லை.

இதுகுறித்து எம்பி, எம்எல்ஏ என அனைவரிடமும் மனு கொடுத்து விட்டோம். அலைந்து, அலைந்து கால் வலி வந்ததுதான் மிச்சமாக உள்ளது. இடிந்த வகுப்பறைக்கு பதில் புதிய கட்டிடம் என்பது கனவாகவே உள்ளது. கடந்த மாதம்  கிராமத்தில் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில்,   பள்ளியின் நிலவரம் குறித்தும், வகுப்பறை கட்டிடம், மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை மனு ஊர்மக்கள் சார்பில் அளித்துள்ளோம். பரிசீலிப்பதாக கலெக்டர் சொல்லியுள்ளார். காத்திருக்கிறோம். மத்திய,மாநில அரசுகள் கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்க போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அப்போது தான் மாணவர்களின் கல்வித்தரம் உயரும். மாவட்ட நிர்வாகம்   உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி...