அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதியில் முதல்வர் பெயரில் கல்வெட்டு வைக்க கிராம மக்கள் எதிர்ப்பு பின்வாங்கிய சோழவந்தான் எம்.எல்.ஏ.

வாடிப்பட்டி, ஜன. 11: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்பாக முதல்வர், துணை முதல்வர் பெயரில் கல்வெட்டு வைக்க சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம் மேற்கொண்ட முயற்சிக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்வெட்டு வைக்கும் முடிவிலிருந்து பின்வாங்கினார்.உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்பாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பெயரடங்கிய கல்வெட்டு வைக்க சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ மாணிக்கம் கடந்த சில தினங்களாக முயற்சி மெற்கொண்டார். பேரூராட்சி அலுவலர்களை வரவழைத்து ஆய்வும் மேற்கொண்டார். பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்பாக எந்த ஒரு கல்வெட்டும் வைக்கக் கூடாது என கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து முதல்வர் பெயரில் கல்வெட்டு வைக்கும் முடிவினை மாணிக்கம் எம்.எல்.ஏ கைவிட்டார்.

இதுகுறித்து வாடிப்பட்டியில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டுக்கு பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியபோது ஒட்டு மொத்தமாக உலகதமிழர்கள், பல்வேறு அமைப்புகளும் போராட்ட களமிறங்கி 2017 ஜனவரி 17ம் தேதி வாடிவாசல் திறக்கும்வரை வீடுவாசல் செல்லமாட்டோம் என்று இரவு பகல் பாராமல் கடல் அலைகளாய் ஆர்பரித்து உறுதியாக எழுந்து நின்றனர். உலகமே தமிழகத்தை திரும்பிபார்த்தது.

போராட்டத்திற்கு முற்று புள்ளிவைக்கும் வகையில் அன்றைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முயற்சி செய்து, அவசரசட்டம் பிறப்பித்து அதற்கான தடை நீக்கப்பட்டது. அந்த நினைவை போற்றும் வகையில் அலங்காநல்லூரில் 248 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டை அரசு விழாவாக்கி, அன்றைய கலெக்டர் வீராராகவராவ் உத்தரவின்பேரில் பேரூராட்சி மற்றும் விழாக்குழு சார்பாக கல்வெட்டு வைக்க முடிவு செய்யப்பட்டது.அந்த கல்வெட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் கால்நடைதுறை அரசு செயலாளர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தது. அதை தற்போது வாடிவாசல் அருகில் வைப்பதற்கு இடம் தேர்வு செய்தபோது கிரா மக்களில் சிலர் மாற்று இடத்தில் வைக்க வேண்டுகோள் விடுத்தனர். அதை நான் ஏற்றுக்கொண்டேன்’ என்றார்.

Related Stories: