கர்நாடகா, ஆந்திராவிற்கு ‘பாரத தரிசன ரயில்’ மதுரை ரயில்வே சுற்றுலா கழக அதிகாரி தகவல்

மதுரை, ஜன. 11: மதுரையிலிருந்து இயக்கப்படும் பாரத தரிசன ரயிலில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களுக்கு சுற்றுலா செல்லலாம் என்று இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக கூடுதல் பொது மேலாளர் ரவிகுமார் தெரிவித்தார்.

மதுரையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘இந்தியன் ரயில்வேயும், இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமும் இணைந்து பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை கடந்த மே 2005 முதல் நடத்தி வருகிறது. இது முழுவதும் சுற்றுலா பயணிகளுக்கான சிறப்பு ரயிலாகும். வரும் ஜன.16ல் ‘பொங்கல் விடுமுறை சிறப்பு ரயில்’ இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து புறப்பட்டு, மைசூர் அரண்மனை, சாமுண்டி மலை, நஞ்சன்கூடு, மேல்கோட், ரங்கபட்டினம், தலைக்காவிரி, பாகமண்டலா மற்றும் கூர்க் ஆகிய இடங்களுக்கு செல்கிறது. 5 நாட்கள் பயணமாகும். இதேபோல் வரும் 22ம் தேதி வடக்கு கேரளா ஸ்பெஷல், தெற்கு கேரளா ஸ்பெஷல், மூகாம்பிகை ஸ்பெஷல் ஆகிய 3 ரயில் சுற்றுலா நடத்தப்படுகிறது. இதில் விரும்பியதை தேர்வு செய்யலாம். இதேபோல் வரும் பிப்.9ம் தேதி ரத சப்தமி ஸ்பெஷல் என்ற சுற்றுலாவிற்கான ரயில் மதுரையிலிருந்து ஆந்திரா செல்கிறது. பெறப்படும் கட்டணத்தில் ரயில், உணவு, தங்குமிடம், சுற்றிப்பார்க்க வாகனம், பணியாளர் வசதி வழங்கப்படுகிறது. கூடுதல் தகவல்களை மதுரை ரயில்நிலைய ரயில்வே சுற்றுலா கழக அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்’’ என்றார்.

Related Stories: