ரேஷன் கடைகளில் தள்ளுமுள்ளு... வாக்குவாதம்... பொங்கல் பரிசு பெற அலைமோதிய கூட்டம்

மதுரை, ஜன. 11: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு பொருட்கள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளக்கரும்பு துண்டு ஆகியவை வழங்கப்படுகிறது. இத்துடன், இந்தாண்டு புதிதாக ரூ.ஆயிரம் ரொக்க பணமும் வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும் பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலையும் வழங்கப்பட்டு வருகிறது. இது கடந்த 6ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

இவற்றை பெற ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரு நாளைக்கு 200 முதல் 300 பேருக்கு மட்டுமே விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதன்படி மூன்று நாட்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம், பொங்கல் தொகுப்பில், அனைவருக்கும், ரூபாய் ஆயிரம் ரொக்கப்பணம் கொடுக்கக் கூடாது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனால் பணம் வாங்காதவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நேற்று முன்தினம் மதியத்திற்கு மேல் அனைத்து ரேஷன் கடைகளிலும் கூட்டம் கூடியது. இரவு 8 மணி வரை இந்த தொகுப்பு தொடர்ந்து கொடுக்கப்பட்டது.மதுரை மாவட்டத்தில் மொத்தம், 8 லட்சத்து, 90 ஆயிரத்து 270 ரேஷன் கார்டுகள் (ஸ்மார்ட் கார்டுகள்) உள்ளன. இந்த கார்டுகளுக்கு மாவட்டத்தில் உள்ள 1,394 ரேஷன் கடைகள் மூலம் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.இந்நிலையில் ஐகோர்ட் உத்தரவால், பொங்கல் தொகுப்புடன் ரொக்க பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என கருதி இதுவரை பணம் வாங்காத பொதுமக்கள் நேற்று அதிகாலை 5 மணிக்கே ரேஷன் கடைகளுக்கு வந்து வரிசையில் நிற்க துவங்கினர். நேரம் ஆக ஆக கடைகளில் கூட்டம் அலைமோதியது.

மதுரை ஞானஒளிபுரம் ஏ.ஏ. ரோட்டில், உள்ள ரேஷன் கடையில், ஆயிரக்கணக்கான கார்டுதாரர்கள் காலையில் திரண்டிருந்தனர். அனைவருக்கும் டோக்கன் விநியோகம் செய்யும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், உடனே கடை விற்பனையாளர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். 10 போலீசார் விரைந்து வந்து கூட்டத்தை கலைக்க தடியை சுழற்றி, மிரட்டி, விரட்டி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.இதேபோல், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ரேஷன் கடையிலும் வெயில் என்று கூட பார்க்காமல் மக்கள் காத்திருந்து, பொங்கல் தொகுப்பை பெற்றனர். பல ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று தொகுப்பை வாங்கிச் சென்றனர். நூற்றுக்கணக்கானோர் கூடியதால், கடை ஊழியர்கள் நெரிசலில் சிக்கி முச்சு திணறினர். இதனால் கடை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. பொதுமக்களும் காலை, மதியம் என உணவை கூட மறந்து, ஒவ்வொரு கார்டுதாரரும் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பெற்றுச்சென்றனர்.

அரிசி கார்டுதாரர்களுக்கு மட்டுமே நேற்று சில கடைகளில் மட்டும் ரூ.ஆயிரம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினர். சீனி கார்டுகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் வழங்குவதாக திருப்பி அனுப்பினர். எனினும் பல இடங்களில் பரிசுத் தொகுப்பு, பணம் வழங்கப்பட்டது.மாவட்ட வழங்கல் அலுவலர் முருகசெல்வி கூறும்போது, ‘‘நீதிமன்ற தடை உத்தரவு தொடர்பாக எங்களுக்கு அரசிடம் இருந்து எந்த உத்தரவும் இதுவரை வரவில்லை. இதுதொடர்பாக ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொண்டோம். அவர்களும் இதுபற்றி ஏதுவும் கூறவில்லை. இதனால், அரசு அறிவித்தபடி வழக்கம்போல் கொடுத்து வருகிறோம்’’ என்றார்.

Related Stories: