கேபிள் டிவி வயர் ரிப்பேர் செய்வதாகக்கூறி ஓட்டை பிரித்து நகை பணம் கொள்ளை பட்டப்பகலில் துணிகரம் மர்ம நபருக்கு போலீஸ் வலை

மேலூர், ஜன. 11: கேபிள் டிவி வயர் சரிசெய்வதாகக்கூறி ஓட்டைப்பிரித்து நகை, பணம் கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பட்டப் பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலூர் அருகில் உள்ள தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தனியார் பஸ் டிரைவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி மேலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் நேற்று தங்கள் பணிக்குச் சென்று விட்டனர்.இந்நிலையில் மதியம் இவர்கள் ஓட்டு வீட்டின் மீது ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார்.அப்பகுதி மக்கள் வீட்டின் மீது என்ன செய்கிறாய் ? என அவரிடம் கேள்வி எழுப்பினர்.

Advertising
Advertising

தான் கேபிள் டிவி ரிப்பேர் செய்பவர் என்றும் மேலே செல்லும் வயரை சரி செய்வதாக அந்த நபர் கூறியுள்ளார். அதன்பிறகு கிராம மக்கள் சென்றதும், மெதுவாக வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி அங்கிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 ஆயிரத்தை எடுத்து கொண்டு தப்பிச் சென்று விட்டார்.இச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேலூர் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் கேபிள் வயர் ரிப்பேர் செய்வதாகக்கூறி ஓட்டை பிரித்து நகையை கொள்ளையடித்த சம்பவம் கிராம மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: