தார்சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு

வானூர், ஜன. 11: வானூர் அருகே தரமற்ற முறையில் தார்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், இளைஞர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தரமான சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வி.புதுப்பாக்கம் கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் என அனைவரும் ஒட்டை கிராமம் வழியாகத்தான் செல்லவேண்டும். ஒட்டை கிராமம் வரையில் செல்லும் 2.5 கிலோ மீட்டர் சாலை ஏரிக்கரையின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி சாலை சேதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்து செல்ல முடியாத நிலையில் குணடும், குழியுமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர்.

மோசமான சாலை காரணமாக கிராமத்திற்கு வந்து செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டது. இதன் காரணமாக காட்டேரிக்குப்பம் மற்றும் வானூருக்கு பொதுமக்கள் நடந்து வந்து பயணம் செய்துவந்தனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். சேதமடைந்த சாலையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன்பேரில், சாலையை ஆய்வு செய்த அதிகாரிகள் சாலை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.இதையடுத்து தற்போது தார்சாலை போடப்பட்டு வருகிறது. தற்போது போடும் தார்சாலை மிகவும் உயரம் குறைந்து உள்ளதாகவும், இந்த சாலை குறுகிய காலத்திலேயே மீண்டும் சேதமடைந்து விடும் என வி.புதுப்பாக்கம் கிராம இளைஞர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சாலை அமைக்கும் பகுதிக்கு வந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது இதுபோன்ற சாலையைத்தான் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளதாக கூறி அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்கள். உரிய நடவடிக்கை எடுக்காததால் இளைஞர்கள், பொதுமக்கள் விரக்தியுடன் திரும்பி சென்றனர்.

உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தரமான முறையில் சாலையை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: