விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து திருக்கோவிலூர் தொகுதியை பிரிக்கக்கூடாது

விழுப்புரம், ஜன. 11:  திருக்கோவிலூர் தொகுதியை விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கக்கூடாது என பொன்முடி எம்எல்ஏ ஆட்சியரிடம் மனு

அளித்தார். திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி, விழுப்புரம் ஆட்சியர் சுப்ரமணியனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கிட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் தொகுதியை சேர்க்குமாறு வேண்டுகிறேன். ஏனெனில், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அளவில் முகையூர் ஊராட்சி ஒன்றியமும், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்கள் அடங்கியுள்ளன.

இவ்விரண்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம மக்கள் விழுப்புரம் மாவட்ட தலைமையிடத்திற்கு வந்து செல்ல ஏதுவான நிலையில் அமைந்துள்ளது.மேலும் இந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம மக்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தின் தலைமையிடம் சுமார் 10 முதல் 15 கி.மீ உட்பட்ட அளவில் அமைந்துள்ளது. பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம் மற்றும் மாவட்ட மருத்துவமனை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்களுக்கு காலவிரயமின்றி சென்றுவரக்கூடிய அளவிலும் தலைமையிடம் அமைந்துள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியை விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திலேயே நிலை நிறுத்திட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மாவட்ட பொருளாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: