சிவப்பு கார்டுக்கு மட்டுமே பொங்கல் பொருட்கள்

புதுச்சேரி, ஜன. 11:  புதுவையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு மட்டுமே பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க முடியும் என கவர்னர் கிரண்பேடி மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கலையொட்டி இலவச பொருட்கள் மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் ஆகியவற்றை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே புதுவையிலும் அனைத்து தரப்பினருக்கும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க வேண்டுமென கவர்னர் கிரண்பேடிக்கு, முதல்வர் நாராயணசாமி கோப்பு அனுப்பியிருந்தார்.

Advertising
Advertising

ஆனால், கிரண்பேடி பட்ஜெட்டில் உள்ளது போல் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டுமே பொங்கல் இலவச பொருட்கள் வழங்க முடியும் என தெரிவித்திருந்தார். இதனால் பொங்கல் நெருங்கிவிட்ட நிலையில், புதுவையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் இலவச பொருட்கள் வழங்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் பொங்கல் இலவச பொருட்கள் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள கவர்னர் கிரண்பேடி, பொதுமக்களின் வரிப்பணம் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். இதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தற்போது சென்னை உயர்நீதிமன்றம் இதை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே இந்த உத்தரவு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் புதுவையில் பொங்கல் பரிசு பொருட்கள் கிடைக்காது என்பதை கவர்னர் கிரண்பேடி மீண்டும் திட்டவட்டமாக தெளிவுபடுத்தி இருக்கிறார். இதற்கிடையே புதுச்சேரி அமைச்சரவை ஓரிரு நாளில் மீண்டும் கூடுகிறது. அதற்கு முன்பாக பொங்கல் பரிசு வழங்குவதற்கான கோப்பு அரசு சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. சிவப்பு ரேஷன் கார்டு களுக்கு ஒரு மாதத்துக்கான இலவச அரிசிக்கான தொகை 600 ரூபாயுடன் பொங்கல் பொருட்களுக்கான தொகை ரூ.135ஐ சேர்த்து மொத்தம் ரூ.735ஐ வங்கிக்கணக்கில் சேர்க்கவும், மஞ்சள் கார்டுகளுக்கு இலவச அரிசி தொகை ரூ.300வுடன் பொங்கல் பொருட்களுக்கான தொகை ரூ.135ஐ சேர்த்து மொத்தம் ரூ.435 வழங்கவும் கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்தால் மட்டுமே பொங்கல் பரிசு தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இல்லாவிடில் சிவப்பு கார்டுகளுக்கு மட்டுமே இத்தொகை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: