சாராயம் விற்ற மூவர் கைது: அதிமுக பிரமுகருக்கு வலை

பண்ருட்டி, ஜன. 11: பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டு கிராமத்தில் உள்ள முந்திரி தோப்பில் சாராயம் விற்பனை செய்வதாக காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிந்தது. இதன் பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது கீழ்மாம்பட்டை சேர்ந்த தங்கமணி(35), ராஜா(28), ராஜேந்திரன்(34) ஆகியோர் சாராயம் விற்றது தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்து, 750 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர். டிராக்டர் டியூப்கள் மூன்றில் சாராயம் எடுத்து வந்து விற்பனை செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் முடப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் சிவகுமார், ஜெயராமன், வெங்கடேசன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சிதம்பரம், ஜன. 11: சிதம்பரம் அருகே பள்ளிப்படை முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பரமசிவன் (47). இவர் வீட்டின் பின்னால் மாடு வளர்த்து வருகிறார். கடந்த 7ம் தேதி இரவு இவரது ஒரு மாடு திருடுபோனது. இதேபோல் அதே தெருவை சேர்ந்த  3 பேரின் மாடுகளும் திருடுபோனது. இதுகுறித்து பரமசிவன் சிதம்பரம் நகர போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் குமார், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு அருகே உள்ள திருமண மண்டபம் அருகே வந்த மினி டெம்போவை நிறுத்தி விசாரித்தபோது அதில் 4 மாடுகள் கடலூருக்கு விற்க எடுத்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து மினி டெம்போவில் வந்த கிள்ளை பூராசாமி மண்டப தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் சின்னமணி (30), டிரைவர் சீர்காழி தாலுகா வெட்டத்தாங்கரை வேல்முருகன் (33) ஆகியோரை கைது செய்து 4 மாடுகள், மினி டெம்போவை பறிமுதல் செய்தனர். மேலும் சிதம்பரம் அருகே மணலூர் காமராஜர் நகரை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

× RELATED புதுவையில் சுருக்கு வலைக்கு விரைவில் தடை