இருசக்கர வாகனம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர், ஜன. 11: கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் விடுத்துள்ள செய்திகுறிப்பு: இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு நிலையில் பணிபுரிந்து வரும் மகளிர், மாற்று திறனாளிகள், மானிய தொகையில் இருசக்கர மோட்டார் வாகனம் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனடிப்படையில் 18 முதல் 40 வயது வரை உள்ள மகளிர், அமைப்பு ரீதியிலான, அமைப்பு சாரா பிரிவில் பணிபுரியும் பெண்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிவோர், சில்லரை வணிகம் மற்றும் இதர தொழில்களில் பணிபுரியும் மகளிர், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு திட்டங்கள், சமூக அமைப்பை சார்ந்த பெண்கள், வங்கி தொடர்பு மகளிர் மற்றும் ஆஷா மகளிர் பணியாளர்கள் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பிறப்பு சான்றிதழ், இருப்பிடச் சான்று, ஓட்டுநர் உரிம சான்று, வருமான சான்று, பணி செய்யும் மகளிர் என்பதற்கான சான்று, ஆதார அட்டை, கல்வி தகுதி சான்று, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், முன்னுரிமை கோருவதற்கான சான்று, ஆதிதிராவிடர், பழங்குடியினர் என்பதற்கான சாதிசான்று, மாற்றுதிறனாளிக்கான அடையாள அட்டை, வாங்க விரும்பும் இருசக்கர மோட்டார் வாகனத்திற்கான விலைப்புள்ளி அல்லது ஒப்படைப்பு விலைப்புள்ளி பட்டியலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்பங்கள் வரும் 18ம் தேதி மாலை 5 மணிக்குள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலோ, பேரூராட்சி அலுவலகத்திலோ, நகராட்சி அலுவலகத்திலோ நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

× RELATED கோவை மத்திய சிறையில் காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு