ஊராட்சி சபை கூட்டத்தில் மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவோம்: திமுக எம்எல்ஏ உறுதி

வாலாஜாபாத், ஜன.11: வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஏனாத்தூர் ஊராட்சியில், ஊராட்சி சபை கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்து கொண்டு, பொதுமக்களின்  குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.அப்போது கிராம மக்கள் கூறுகையில், தமிழக அரசு வழங்கும் இலவச ஆடு, பசுமை வீடு உள்பட அனைத்தும் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே வழங்குகின்றனர் ஏழை எளியவர்களுக்கு தமிழக அரசின் எவ்வித நலத்திட்டங்கள்,  எங்கள் கிராமத்திற்கு இதுவரை வந்து சேரவில்லை.

முதியோர் உதவித்தொகை, 100 நாள் வேலை திட்டம், குளம், குட்டைகளை தூர்வாருதல், சுகாதார வளாகம் சீரமைத்தல், ஆரம்ப பள்ளியை மேம்படுத்துதல், குடிநீர் பிரச்னை, சாலை வசதி, கால்வாய்களை சீரமைப்பது உள்பட  பல்வேறு கோரிக்கைகளை கூறினர்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி, உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ எழிலரசன் தெரிவித்தார்.குறிப்பாக கிராம மக்களிடையே பெரும்பாலான கோரிக்கையாக முதியோர் உதவித்தொகை மட்டுமே இருந்தது. அதனை பெற்று தருவதாக எம்எல்ஏ உறுதியளித்தார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் செல்வம், குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், மாநில நெசவாளரணி செயலாளர் அன்பழகன், மாவட்ட விவசாய தொழிலாளரணி  வேதாசலம் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


× RELATED வேலூரில் 500க்கும் மேற்பட்டவர்களுடன்...