தென்னேரி - மருதம் சாலையில் நடுநிலைப்பள்ளி அருகே வேகத்தடை இல்லாததால் மாணவர்கள் அவதி

வாலாஜாபாத், ஜன.11: தென்னேரி - மருதம் செல்லும் சாலையில் மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, நடுநிலைப்பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.வாலாஜாபாத் அடுத்த தென்னேரி - மருதம் செல்லும் சாலையை ஒட்டி 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதே சாலையில் ஓடந்தாங்கல் உள்ளது. இங்கு அரசு நிதி நாடும் நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது.இந்த பள்ளியில் தென்னேரி, மேட்டு காலனி , சிறுபாகல், சின்னிவாக்கம், ஓடந்தாங்கல், மருதம், மல்லிகாபுரம், மடவிளாகம் உள்பட பல கிராமங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.மாணவ, மாணவிகள் காலையும் மாலையும் சாலையோரமாக பள்ளிக்கு நடந்து வருகின்றனர். இந்த சாலையில் தினமும் கார், லாரி, பைக், அரசு மற்றும் தனியார் பஸ், வேன் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று  வருகின்றன.கடந்த 6 மாதத்துக்கு முன் இந்த சாலையில், தார்ச்சாலை அமைக்கப்பட்டது. அப்போது, பள்ளி அருகிலும், வளைவு பகுதிகளிலும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.  இதுபற்றி பலமுறை அரசு அலுவலர்களிடம் தெரிவித்தனா். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ஓடந்தாங்கல் பகுதியில் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் இங்குள்ள சாலையை கடப்பதற்கு  கடும் சிரமப்படுகின்றனர்.இந்த பள்ளியின் முன் பகுதியில் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தினோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.கடந்த 6 மாதத்துக்கு முன், இந்த சாலையில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. அதற்கு முன் இப்பகுதியில் வேகத்தடை இருந்தது. இந்த வேகத்தடையால் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு இருந்தது. அனால், புதிதாக  அமைக்கப்பட்ட தார்சாலையில் வேகத்தடையை அகற்றிவிட்டனர். இதனால், இங்கு மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால், எங்களின் குரல், அதிகாரிகளின் காதில் விழவில்லை.குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது, பெற்றோர்கள் பள்ளி வரை அழைத்து விடும் சூழல் நிலவுகிறது. இதை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு, இப்பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றனர்.


× RELATED தண்ணீர் இல்லாததால் கத்தரிக்காய் விளைச்சல் பாதிப்பு