மறைமலைநகர் அருகே விவசாயி சாவில் தொடரும் மர்மம் கொலை வழக்காக பதிய கோரி மருத்துவமனையை முற்றுகை

செங்கல்பட்டு, ஜன.11: மறைமலைநகர் அருகே கருநிளம் கிராமத்தில் கிணற்றில் இறந்துகிடந்த விவசாயி ஏழுமலை சாவில் மர்ம நீடிக்கிறது. அவரது சாவை கொலை வழக்காக விசாரிக்கக்கோரி உறவினர்கள் உடலை வாங்க  மறுத்து மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மறைமலைநகர் அடுத்த கருநிலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (46) விவசாயி. இவரது மனைவி கிருஷ்ணவேனி (42) இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஏழுமலை அவரது விவசாய நிலத்தின் அருகில் உள்ள சிகாமணி என்பவரது விவசாய கிணற்றில் மர்மமான நிலையில் இறந்து கிடந்தார். அவரது முகம் மற்றும் தலையில் பலத்த காயம்  ஏற்பட்டிருந்தது. தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் போலீசார் ஏழுமலை உடலை மிட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக விவசாய கிணற்றில் மின்மோட்டார் பழுது பார்க்க சென்ற ஏழுமலை கால் தவறி கிழே விழுந்து இறந்ததாக போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது இதனால், போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்தனர். ஆனால்,  ஏழுமலையின் உறவினர்கள் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும் இதுகுறித்து முறையாக விசாரிக்க வேண்டும் என்று போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில், ஏழுமலையின் உறவனர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் நேற்று காலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்து ஏழுமலை உடலை வாங்க மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்து செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன், மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் சம்பவ இடம் வந்து ஏழுமலை உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் போலீசாரை முற்றுகையிட்டு ஏழுமலைக்கும், சிகாமணி குடும்பத்துக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்தது. அவர்கள் தான் ஏழுமலையை அடித்து கொலைசெய்து கிணற்றி வீசி இருக்ககூடும். மேலும்,  ஏழுமலையின் கையில் வெட்டுக்காயங்கள் இருந்தன, தலையிலும் பலத்த காயம் உள்ளது இதை எப்படி தற்கொலையாக கருத முடியும், எனவே ஏழுமலையின் சாவை கொலை வழக்காக விசாரிக்க வேண்டும், கொலைக்கு  காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து, போலீசார் சிகாமணியை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதன்பிறகு, வண்டலூர் டிஸ்பி  வலவன் மருத்துவமனை வந்து ஏழுமலை உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பிரேத பரிசோதனை முடிந்தது கொலை என்று நிருப்பிக்கப்பட்டால் கண்டிப்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கொலை வழக்கு  பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி அளித்தர். அதன்பினர் மாலை ஏழுமலையின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கருநிலம் கிராமத்தில்  தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


× RELATED திருமணமான மூன்றே மாதங்களில் இளம்பெண்...