பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க ரேஷன் கடை திறக்காததால் பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பெரிதும் பாதிப்பு

ஆவடி, ஜன.11: திருநின்றவூரில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க மதியம் வரை ரேஷன் கடையை திறக்க ஊழியர்கள் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஆவடி திருநின்றவூர்-பெரியபாளையம் நெடுஞ்சாலை பாக்கம் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு வெங்கடேசபுரம் பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இக்கடையில் 500க்கு  மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு ரேஷன் பொருட்கள்  வழங்கப்படுகிறது.இக்கடையில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ₹1000 பணம் வழங்க ரேஷன் ஊழியர்கள் 2 நாட்களாக வழங்க வரவில்லை. இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் பொங்கல் பரிசு பொருட்கள்  வாங்க ரேஷன் கடையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் கடையை திறக்க மதியம் 12 மணி வரை யாரும் வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த 300க்கு மேற்பட்ட மக்கள் திருநின்றவூர்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், இருபுறமும் வாகனங்கள்  அணிவகுத்து நின்றன.
 தகவலறிந்து திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், ‘‘நாங்கள் பொங்கல் பரிசு  பொருள் வாங்க 2 நாட்களாக வந்து கொண்டு இருக்கிறோம். விற்பனையாளர்கள் ரேஷன் கடையை திறக்காமல் உள்ளனர். இன்றும் காலை 7 மணி முதல்  காத்திருக்கிறோம். இதுவரை கடை திறக்க விற்பனையாளர்கள்  வரவில்லை’’ என கூறி வாக்குவாதம் செய்தனர்.  

இதையடுத்து போலீசார் விற்பனையாளரிடம் செல்போன் மூலமாக பேசியபோது ரேஷன் கார்டுகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை பெறுவதற்காக திருவள்ளூர் கருவூலத்தில் காத்திருப்பதாகவும், விரைவில் ரேசன் கடையை  திறந்து பொருட்கள்  வழங்குவதாகவும் தெரிவித்தனர். போலீசார் அளித்த தகவலை தொடர்ந்து மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.  இதன் பின்னர் மாலை 3 மணி அளவில் விற்பனையாளர்கள் ரேஷன்  கடைக்கு பணத்துடன் வந்து பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் ₹1000 பணத்தை வழங்கினார்.


× RELATED அப்பணம்பட்டியில் ரேஷன் கடை...