மொபட்டுகள் மோதிய விபத்தில் தந்தை கண் முன்பு மகன் பரிதாப பலி

அம்பத்தூர், ஜன. 11: அம்பத்தூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையில், மொபட் மீது மற்றொரு மொபட் மோதி தந்தை கண் முன்பு மகன் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அம்பத்தூர் பானு நகர், 26வது அவென்யூ பகுதியை சேர்ந்தவர் முரசொலி (42). மாற்றுத்திறனாளி. இவரது மகன் ஆகாஷ் (11). சிடிஎச் சாலையிலுள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலையில், முரசொலி மகனை அழைப்பதற்கு வீட்டில் இருந்து மொபட்டில் பள்ளிக்கூடம்  சென்றார். பின்னர் ஆகாஷுடன் பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். இவர்கள்,  மொபட்டில் அம்பத்தூர்- செங்குன்றம் நெடுஞ்சாலை தனியார் பள்ளிக்கூடம் எதிரே வந்தபோது திடீரென முன்னால் சென்ற மாநகராட்சி ஊழியர் சீனிவாசன் (50) என்பவரது மொபட்டின் மீது முரசொலி மோதினார்.

இதில் 3 பேரும் மொபட்டுடன் சாலையில்  விழுந்தனர். இதில் ஆகாஷிற்கு தலையில் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். முரசொலி, சீனிவாசன் ஆகிய இருவரும் லேசான காயம் அடைந்தனர். மூவரையும் அக்கம்  பக்கத்தினர் மீட்டு, அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆகாஷ் வழியில் இறந்ததாக கூறினர். இதைக்கேட்ட முரசொலி கதறி அழுதார். தகவலறிந்து  பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ஆகாஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின்பேரில் போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் தந்தை கண் முன் மகன் இறந்த சம்பவம் அம்பத்தூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


× RELATED தந்தையைக் கொன்ற மகன் கைது