நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

பள்ளிப்பட்டு, ஜன. 11: பள்ளிப்பட்டு பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், சுந்தரம்மா கண்டிகை காலனிக்கு அருகில் நீர்நிலை புறம்போக்கு பகுதியை ஆக்கிரமித்து சிலர் வீடுகள் கட்டியுள்ளதாக பொதட்டூர்பேட்டையை சேர்ந்த  அண்ணாமலை என்பவர் நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏரி, குட்டை உள்பட நீர் நிலைகளில் அத்துமீறி கட்டியுள்ள வீடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நீர் நிலையில் வீடு கட்டி வசித்து வரும் 13 குடும்பங்களை சேர்ந்தவர்களுடன் வருவாய்த்துறையினர் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி  வந்தனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை வருவாய்த்துறை பின்பற்றவில்லை என பொதுநல வழக்கு தொடர்ந்த நபர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வியாழக்கிழமைக்குள்  ஆக்கிரமிப்பு வீடுகளை  அகற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்தது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து திருத்தணி கோட்டாட்சியர் பவணந்தி தலைமையில், பள்ளிப்பட்டு வட்டாட்சியர் லட்சுமணன்(பொறுப்பு), டி.எஸ்.பி சேகர் ஆகியோரை கொண்ட குழுவினர் கிராமத்தில் சமாதான  பேச்சுவார்த்தை நடத்தினர்.

பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் தலித் மக்கள் முன்னணி அமைப்பாளர் வக்கீல் திருநாவுக்கரசு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ‘‘கடந்த 40 ஆண்டுகளாக 20க்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  நீர்நிலை பகுதியில் வசிப்பவர்களிடம் வீட்டு வரி வசூலித்தது, மின் இணைப்பு வழங்கப்பட்டது ஏன்? அரசு 40 ஆண்டுகளுக்கு முன்பு மறுப்பு தெரிவித்திருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு இடத்தில் வீடு கட்டிக்கொண்டு  வசித்திருப்பார்கள்.  நீர் நிலை புறம்போக்கு இடங்களில் கட்டிய வீடுகள் அகற்றப்பட வேண்டும் என்று கூறும்  நீதிமன்றம், திருத்தணியில் உள்ள கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள் நீர் நிலையில்தான் கட்டப்பட்டுள்ளது. அதையும் இடிக்க உத்தரவிடுமா? பல்வேறு பகுதிகளில், நீர் நிலையில் வசித்து வருபவர்களை விட்டுவிட்டு சிறுபான்மை மக்களாக வாழ்வாதாரம் இன்றி, அவதிப்பட்டு வருபவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது தவறு. பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரசு  இடத்தை ஒதுக்கீடு செய்து வீடு கட்டிக்கொண்ட பிறகு, வீடுகளை அகற்ற வேண்டும்’’ என வலியுறுத்தி பேசினார்.

அதற்கு கோட்டாட்சியர் பவணந்தி, ‘‘உங்களுக்கு இடம் ஒதுக்கிய பிறகு இங்கு உள்ள வீடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்படும். நீங்கள் கேட்ட பசுமை வீடுகள் பற்றி மாவட்ட கலெக்டர் பார்வைக்கு கொண்டு சென்று  நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதி அளித்ததை அடுத்து காலை முதல் மதியம் வரை  நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது. காவல் ஆய்வாளர்கள் ரமேஷ், பரந்தாமன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டு இருந்தனர்.  × RELATED முதல் சட்டமாக முத்தலாக் மசோதா...