பாங்காக்கில் இருந்து வந்திருப்பதாக கூறி மருத்துவமனை ஊழியரிடம் நூதனமுறையில் செயின் பறிப்பு: ஆசாமிக்கு போலீஸ் வலை வீச்சு

சென்னை: பாங்காக்கில் இருந்து 2 மாத விடுமுறையில் வந்திருப்பதாக கூறி, பேச்சு கொடுத்து மருத்துவமனை ஊழியரை கடை கடையாக அழைத்துச்சென்று நூதன முறையில் செயினை பறித்துச் சென்ற ஆசாமியை போலீசார்  தேடி வருகின்றனர்.மயிலாப்பூர் கபாலி காலனியை சேர்ந்தவர் கோபி (24). இவர், ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருந்தாளுநராக வேலை செய்கிறார். இவரது தாய் மயிலாப்பூரில் உள்ள ஆஞ்சநேயர்  கோயில் முன்பு பூக்கடை வைத்துள்ளார். கடந்த 6ம் தேதி கோபி பூக்கடையில் இருந்த போது 40 வயது மதிக்கத்தக்க நபர், தன்  பெயர் கார்த்திக் என்று அறிமுகம் செய்துதுள்ளார். மேலும், பாங்காக்கில் இருந்து 2 மாத விடுப்பில்  வந்துள்ளதாகவும், தான் போர்ட் கிளப் சாலையில் வசித்து வருவதாகவும் கூறிவிட்டு சென்றுள்ளார்.

Advertising
Advertising

பின்னர், நேற்று முன்தினம் மீண்டும் பூக்கடைக்கு வந்த கார்த்திக், வீட்டிற்கு மளிகை பொருட்கள் மொத்தமாக வாங்க வேண்டும் என கோபியிடம் கூறியுள்ளார். உடனே, நான் அழைத்து செல்கிறேன் என கூறி கோபி தனது  பைக்கில் அழைத்து சென்றுள்ளார். பிராட்வேயில் உள்ள மளிகை கடைக்கு சென்றுள்ளனர். அங்கு திடீரென கார்த்திக், எனது மனைவி தி.நகருக்கு துணி வாங்க வந்துள்ளார். அவசரமாக செல்ல வேண்டும் எனக்கூறி மளிகை  பொருட்கள் வாங்காமல், கோபியை அழைத்துக்கொண்டு தி.நகர் சென்றுள்ளார்.தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் இருவரும் ஜூஸ் குடித்துள்ளனர். அப்போது கார்த்திக், கோபியிடம் ‘உங்கள் செயின் அழகாக உள்ளது. கழற்றி கொடுங்கள் போட்டு பார்க்கிறேன்’ என்று  கூறியுள்ளார். அதை நம்பி கோபியும் தனது மூன்றரை சவரன் செயினை கழற்றி கொடுத்துள்ளார். அதை கார்த்திக் வாங்கி கழுத்தில் போட்டுக்கொண்டார்.

பிறகு இருவரும் உஸ்மான் சாலையில் உள்ள துணிக்கடைக்கு சென்றனர். அப்போது கோபியை பைக்கை நிறுத்திவிட்டு வா, நான் கடை முன்பு நிற்கிறேன் என்று கார்த்திக் கூறியுள்ளார். அதன்படி கோபி பைக்கை நிறுத்தி விட்டு  வந்து பார்த்த போது, மூன்றரை சவரன் செயினுடன் கார்த்திக் மாயமாகி இருந்தது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த கோபி, சம்பவம் குறித்து பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, செயினுடன் மாயமான நபர் உண்மையிலேயே பாங்காக்கில் இருந்து வந்தவர் தானா  அல்லது கோபியிடம் செயினை பறிக்க திட்டமிட்டு கதை விட்டாரா என்றும், சிசிடிவி பதிவு காட்சி மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: