ஷெனாய் நகரில் பரபரப்பு தலைமறைவு ரவுடியை போலீஸ் சுற்றிவளைப்பு: கீழே தள்ளியதில் எஸ்ஐ கை முறிந்தது

சென்னை: தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த பிரபல ரவுடியை ஷெனாய் நகரில் துரத்தி சென்று போலீசார் கைது செய்தனர். அப்போது ரவுடி கீழே தள்ளியதில் எஸ்ஐ கை எலும்பு முறிந்தது. மேலும் ஒரு போலீகாரர்  படுகாயம் அடைந்தார்.சென்னை டி.பி.சத்திரத்தை சேர்ந்தவர் தீச்சட்டி முருகன் (40). அப்பகுதியில் குடிநீர் கேன் சப்ளை செய்து வந்தார். இவர், கடந்த 2017, ஜனவரி 30ம் தேதி ரவுடிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து, டி.பி.சத்திரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இக்கொலையில் தலைமறைவாக இருந்த ெஷனாய் நகர், எச். பிளாக்கை சேர்ந்த பிரபல ரவுடி ராஜேஷ் (எ) ராஜேஷ்குமார் (24) என்பவரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக ரவுடி  ராஜேஷ்குமார் பிடிபடாமல் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஷெனாய் நகரில் உள்ள தனது வீட்டுக்கு ராஜேஷ்குமார் வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கீழ்ப்பாக்கம் போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், உதவி கமிஷனர் ஜெகதீசன் மேற்பார்வையில், டி.பி.சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ராஜேஷ்குமாரின் வீட்டை சுற்றி வளைத்தனர்.  வீட்டை போலீசார் சுற்றி வளைத்ததை அறிந்ததும் ராஜேஷ்குமார் தப்பி ஓடினார்.போலீசார் அவரை விரட்டி சென்றனர். பரமேஸ்வரி நகர் அருகே எஸ்ஐ சுபாஷ், கான்ஸ்டபிள் மதியழகன் ஆகிய இருவரும் ராஜேஷ்குமாைர மடக்கிப் பிடித்தனர். அவர்களை கீழே தள்ளிவிட்டு அவர் தப்பிக்க முயன்றார். சுமார்  அரை மணி நேரம் போலீசார் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.இந்த தேடுதல் வேட்டையில் ராஜேஷ்குமார் தாக்கியதில் எஸ்ஐ சுபாஷின் கை எலும்பு முறிந்தது. கான்ஸ்டபிள் இடுப்பில் படுகாயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகின்றனர். பிடிபட்ட ராஜேஷ்குமாரை போலீசார் கைது செய்து, நேற்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் மீது கஞ்சா கடத்தி விற்பனை செய்ததாக இதே காவல்நிலையத்தில் ஒரு  வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: