பொங்கல் பரிசு வாங்க அலைமோதும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளுக்கு பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேரில் ஆய்வு

சென்னை: பொங்கல் பரிசு வாங்க சென்னை முழுவதும் உள்ள  ரேஷன் கடைகளில் அதிகாலை முதலே  பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் தடுக்க அனைத்து  ரேஷன் கடை முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ₹1000 பணம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் 1,800 ரேஷன் கடைகள் உள்ளன. 1000 ரூபாய் வழங்குவது குறித்து ஐகோர்ட் தீர்ப்புக்கு முன்பு  பொங்கல் பரிசு 5 வகையான அடையாள அட்டைகள் உள்ளவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தேதி வாரியாக வழங்கப்பட்டு வந்தது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் நேற்று காலை ரேஷன் கடைகள் திறப்பதற்கு முன்பே ஆயிரக்கணக்கில் ஒன்று கூடினர். இதனால் அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி 12 காவல் மாவட்ட துணை கமிஷனர்கள் தலைமையில் அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன்  கடைகளுக்கு தலா 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்  யானைகவுனி மற்றும் வண்ணாரப்பேட்டையில் உள்ள ரேஷன் கடைகளுக்கு நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள்  அதிகளவில் கூட்டமாக உள்ள ரேஷன் கடைகளுக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

× RELATED சென்னையில் காவல்துறையினர் கட்டாயமாக...