ஓஎம்ஆர் சாலையில் பரபரப்பு போதையில் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய இளம்பெண்

* காரில் இருந்து இறங்க மறுப்பு * லைசென்ஸ் அதிரடியாக பறிப்பு

துரைப்பாக்கம்: துரைப்பாக்கத்தில் போதையில் கார் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய இளம்பெண்ணின் லைசென்சை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்தனர். அவர் பயத்தில் காரில் இருந்து கீழே இறங்காமல் அடம்  பிடித்ததால் ஓஎம்ஆர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருப்போரூரில் இருந்து நேற்று காலை ஓஎம்ஆர் சாலை வழியாக காரில் சென்னைக்கு வந்து கொண்டிருதார். சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே வந்தபோது நிலைதடுமாறி முன்னால்  நின்றிருந்த மற்றோரு கார் மீது வேகமாக மோதியது. இதில், இரண்டு கார்களும் பலத்த சேதம் அடைந்தன. ஆனால், அந்த இளம்பெண் மட்டும் காரில் இருந்து கீழே இறங்கவில்லை.  இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து  பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

பின்னர், போக்குவரத்து போலீசார் வந்து அந்த பெண்ணிடம் சாலையோரம் காரை  நிறுத்திவிட்டு கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால், அதை கண்டுகொள்ளாதது போல் காரிலேயே அவர் அமர்ந்திருந்தார். போலீசார்  எவ்வளவோ கூறியும் அவர் காரில் இருந்து கீழே இறங்கி வரவில்லை. இது போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.போலீசார் பலமுறை கேட்டுக் கொண்டதால், சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு இளம்பெண் காரை விட்டு இறங்கி தள்ளாடியபடி போலீசாரிடம் நடந்து வந்தார். அப்போதுதான் அவர் போதை தலைக்கேறிய நிலையில் இருந்தது  தெரியவந்தது.விசாரணையில், அவர் சென்னையை சேர்ந்த ஸ்நிதா (20) என்பது தெரிந்தது. இதையடுத்து காவல் நிலையத்துக்கு போலீசார் அவரை அழைத்தனர். அப்போது, ‘நான் யார் தெரியுமா, உங்களை விடமாட்டேன்’’ என்று அந்த  இளம்பெண் போலீசாரை மிரட்டியுள்ளார். உடனே, லைசென்சை வாங்கி விட்டு இளம்பெண்ணை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


× RELATED சாலை விபத்தில் பெண் பலி உடலை சாலையில் கிடத்தி மறியல்