திருச்செந்தூர் அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

திருச்செந்தூர், ஜன. 11: வீரபாண்டியன்பட்டணத்தில் பட்டப்பகலில் பெண்ணிடம் 5 பவுன் நகையை பைக் கொள்ளையர் பறித்து சென்றனர்.
திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டணம் ஜான் தெருவைச் சேர்ந்தவர் குரூஸ். இவர் சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ரோசி(37). இவர் பிள்ளைகளுடன் ஊரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் ரோசி வீட்டு முன் இருந்த செடிகளை வெட்டி சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று ரோசி அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்தான். உடனே ரோசி செயினை கெட்டியாக பிடித்துக்கொண்டு கொள்ளையனுடன் போராடினார்.

அவரது சத்தம் கேட்டு பொதுமக்கள் வருவதற்குள் அந்த நபர் ரோசியிடம் 5 பவுன் நகை பறித்து கொண்டு ஏற்கனவே தெரு ஓரம் பைக்கில் தயாராக நின்றவருடன் தப்பிச் சென்றுவிட்டான். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சமாகும். இதுகுறித்து  அவர் திருச்செந்தூர் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன், எஸ்ஐ பழனி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற பைக் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

× RELATED நகை வாங்குவதுபோல் நடித்து நகைக்கடையில் திருடிய இளம்பெண் சிக்கினார்