7வது ஊதிய பயன்களை நடைமுறைப்படுத்தக்கோரி திருச்செந்தூரில் கோயில் பணியாளர்கள் உண்ணாவிரதம்

திருச்செந்தூர், ஜன. 11: 7வது ஊதியக்குழு பயன்களை நடைமுறைப்படுத்த கோரி திருச்செந்தூரில் கோயில் பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக, இந்து சமய அறநிலையத்துறை, மாநிலம் முழுவதும், சைவ, வைணவ கோவில்களை நிர்வகிக்கிறது. இக்கோயில்களில் பணிபுரிந்து வரும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட காலமாக போராட்டங்கள் நடத்துகின்றனர். தற்போதும், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் படி, ஊழியர் ஊதிய உயர்வு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பணிக்கொடை, காலி பணியிடங்களில், தற்காலிக ஊழியர்களையே நியமித்து நிரந்தரப்படுத்தல், ஊதிய முரண்பாட்டை தவிர்த்து, சம பணிக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும். ஆண்டு வருமானம், 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் உள்ள கோயில்களின் ஊழியர்களுக்கும், முதுநிலை கோயில் ஊழியர் ஊதியம் வழங்குதல் மற்றும் பிற கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்காலிகமாக போராட்டங்களை நிறுத்தி வைத்த ஊழியர்கள், போராட்ட அறிவிப்பை அமைச்சர் மற்றும் ஆணையர், செயலாளர், திருக்கோயில் நிர்வாக அதிகாரி ஆகியோருக்கு அளிக்கப்பட்டது. ஆனால் 7வது ஊதியக்குழு ஊதியம் வழங்குவது குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் கடந்த 3ம் தேதி முதல் மீண்டும் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நேற்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் இணை ஆணையர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள் சங்க திருச்செந்தூர் கிளை தலைவர் பாலசுப்பிரமணிய குருக்கள் தலைமை வகித்தார்.

செயலாளர் நெல்லையப்பன், துணைத்தலைவர் செந்தில்குமார், பொருளாளர் ஆறுமுகராஜ், மாநில துணைத்தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர். இதில் விடுதி மானேஜர் சிவநாதன், உள்துறை கண்காணிப்பாளர் சொர்ணம், மானேஜர் விஜயன், தொழிற்நுட்ப பணியாளர் சங்க இணை தலைவர் முருகன் மற்றும் தொழிற்நுட்ப பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், உபகோயிலான குலசை, நாசரேத், கிருஷ்ணாபுரம் உள்பட பல கோயில்களை சேர்ந்த பணியாளர்கள் 20 பெண்கள் உட்பட 150க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

Related Stories: