நகையை மீட்க அழைத்து சென்ற போது போலீசார் கண் முன்னே கைதி கழுத்தறுத்து தற்கொலை முயற்சி

தூத்துக்குடி, ஜன.11:திருடிய நகையை மீட்க போலீசார் அழைத்து சென்றபோது கைதி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி சாரங்கபாணி தெருவில் கடந்த 8ம்தேதி நடுத்தர வயது பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர், அந்த பெண் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றார். அப்போது அந்த பெண் சப்தம் போட்டதால், அக்கம்பக்கத்தினர் திரண்டு அந்த வாலிபரை பிடித்து வைத்து வடபாகம் போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் வந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்வைகுண்டம் அருகேயுள்ள பத்மநாபமங்கலத்தை சேர்ந்த ஆழ்வார் மகன் அரசமுத்து(39) என்பதும் இவர் மீது பல்வேறு செயின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து தனிப்படையினர் விசாரித்ததில் அவர் தான் பறித்த அனைத்து நகைகளையும் நெல்லை மாவட்டம் சிவந்திபட்டியிலுள்ள தனது உறவினர் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை அழைத்து கொண்டு சிவந்திபட்டி சென்றனர். அங்கு வீட்டின் சமையலறையில் நகைகளை வைத்திருப்பதாக கூறிய அரசமுத்து திடீரென அங்கிருந்த பழைய அரிவாள்மனையை எடுத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.  இதனால் அதிர்ச்சியான போலீசார் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை தூத்துக்குடி 2வது ஜேஎம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்தனர்.

× RELATED போலீஸ்காரர் மீது தாக்குதல்