தச்சமொழியில் பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கும் அங்கன்வாடி மையம்

சாத்தான்குளம், ஜன. 11: தச்சமொழியில் பழுதடைந்த அங்கன்வாடி மையம்  சீரமைக்கப்படாததால் புதர் மண்டி காணப்படுகிறது. 3ஆண்டுகளாக   வாடகை கட்டிடத்தில், அடிப்படை வசதியின்றி செயல்படுவதாக  பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சாத்தான்குளம் பேருராட்சிக்குள்பட்ட 7வது வார்டு தோப்புவளம் சாலையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். போதிய பராமரிப்பின்றி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் குழந்தைகள் இருந்த போது கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் காயமின்றி தப்பினர். இதையடுத்து அப்போதைய ஒன்றிய ஆணையாளர் சங்கரநாராயணன் பார்வையிட்டு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

கட்டிடம் அபாய நிலையில் இருந்ததால் குழந்தைகள் அருகில் உள்ள வாடகை கட்டிடத்தில் கல்வி பயின்று வருகின்றனர். அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை என பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 3 ஆண்டுகளாகியும் இடிந்து விழுந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அக்கட்டிடம் மேலும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் செடிகள் அதிகம் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இங்கிருந்து விஷசந்துகள் வீடுகளுக்கு புகுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து சாத்தான்குளம் நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வக்கீல் வேணுகோபால் கூறுகையில், இந்த அங்கன்வாடி கட்டிடம் ரூ.1.50 லட்சத்தில் சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கட்டிடம் சீரமைக்கப்படாமல் மிகவும் மோசமாக உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக  பாழடைந்து கிடக்கும் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

× RELATED வலையபட்டி அங்கன்வாடி மையத்திற்கு 10வது...