சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு மின்மாற்றிகள் ஏற்றிச் சென்ற வாகனங்களால் மக்கள் அவதி

மானூர், ஜன. 11:  மானூர் அருகே சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு மின்மாற்றிகள் ஏற்றிச் சென்ற வாகனங்களால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். இதனால் அவர்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். மானூர் அருகே உள்ள தெற்குப்பட்டியில் தனியார் நிறுவனம் மூலம்  சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் பேனல் அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. சுமார் 300 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் இந்த பணிகள் நடைபெறுகின்றன. நிலங்கள் சீர்திருத்தம் முடிந்து சூரியஒளி மின்சார தயாரிப்புக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லும் பணிகள் நடக்கின்றன.  கடந்த ஒரு வார  காலமாக கனரக வாகனங்களில் இதற்கான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வரும் நிலையில், நேற்று  முன்தினம் மிகப்பெரிய 2 மின்மாற்றிகள் கொண்டு வரப்பட்டன. தெற்குப்பட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதி வழியாக 800  மீட்டருக்கு மேல் மின்மாற்றிகளுடன் வாகனங்கள் கடந்து செல்ல வேண்டியுள்ளது.  

முதற்கட்டமாக கடந்த 8ம்  தேதி மாலை தெற்குபட்டி கிராமம் அருகே வந்தபோது மின்வயர் குறுக்காக சென்றதால் நடுவழியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் மானூரில் இருந்து தெற்குபட்டிக்கு பஸ்சில் வந்த பயணிகளும், பள்ளி குழந்தைகளும் ஊருக்குள் செல்ல முடியாமல் பஸ்சில் இருந்து இறங்கி சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்றனர்.  தொடர்ந்து மின்வயர்கள் உயர்த்தப்பட்டு வாகனங்கள் கடந்து சென்றன. அப்போது ஊரின் வெளிப்பகுதியில் உள்ள பாலத்தின் கைப்பிடிச் சுவர் உடைத்துவிட்டு சென்றுள்ளன. மேலும் குடியிருப்பு பகுதியை கடந்து செல்ல அனைத்து வீடுகளுக்கு செல்லும் மின்இணைப்பு வயர்களை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக மின்மாற்றி ஏற்றி வந்த 2 லாரிகளும் அங்கேயே நிறுத்தப்பட்டன.  மேலும் மற்ற பொருட்கள் ஏற்றி வந்த 15க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களும் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் தெற்குபட்டி கிராம மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

இந்நிலையில் ஆவேசமடைந்த கிராம மக்கள், நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மானூர் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தனியார் கம்பெனி அதிகாரி தியாகராஜன் மற்றும் கிராம ஊர் பெரியவர்களை அழைத்து பேசினர்.  பின்னர் மின்வாரிய அதிகாரிகள் உதவியோடு மின்வயர்களை துண்டித்து வாகனங்கள் சென்றதும் உடனடியாக இணைப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதையேற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். உடனடியாக மின்வாரியத்தினர் வீடுகளுக்கான இணைப்பை துண்டித்து லாரிகள் செல்ல வழி ஏற்படுத்தினர். தொடர்ந்து வீடுகளுக்கான மின் இணைப்புகள் வழங்கும் பணியும் நடந்தது.

Related Stories: