நாங்குநேரியில் தனி நீதிமன்ற பணிகள் தொடக்க விழா

நாங்குநேரி, ஜன. 11:  நாங்குநேரியில் தனி நீதிமன்றப் பணிகள் துவக்க விழா நடந்தது. நாங்குநேரியில் செயல்பட்டு வரும் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தின் பணிகள் ஒருங்கிணைந்த பணிகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த பணிகளை முதன்மை மற்றும் கூடுதல் நடுவர்கள் கவனித்து வந்தனர். இந்நிலையில் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றப் பணிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தனித்தனியே செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் பிரிக்கப்பட்ட தனி நீதிமன்றப் பணிகளின் துவக்க விழா, நேற்று நாங்குநேரியில் நடந்தது. நீதிபதி ராஜமாணிக்கம் தலைமை வகித்தார், ‘நாங்குநேரி மாவட்ட நீதிமன்ற முதன்மை நடுவர் சந்திரசேகர் வரவேற்றார். மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர், புதிய குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்திற்கான கல்வெட்டுக்களை திறந்து வைத்தார்.

இதில் நாங்குநேரி கூடுதல் நடுவர் சிவசக்தி, வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் காமராஜ், துணை நடுவர் மாயகிருஷ்ணன், கூடுதல் நடுவர்  பாஸ்கர், நாங்குநேரி டிஎஸ்பி இளங்கோவன் மற்றும் வக்கீல் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

‘‘நல்ல ஊர் நாங்குநேரி’’நாங்குநேரி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நடுவர் சந்திரசேகர் பேசுகையில், நான் இங்கு பணிக்கு வரும் முன் தமிழகத்திலேயே பதற்றமான பகுதி நாங்குநேரி என அறிந்தேன். ஆனால் இங்கு வந்துபிறகு அப்படி பதற்றம் ஏதும் காணப்படவில்லை. மற்ற ஊர்களைப் போல அமைதியாகத்தான் உள்ளது. இங்குள்ளவர்கள் நிர்வாகத்திற்கு மிகுந்த ஒத்துழைப்பு தருகின்றனர். இதே ஊரில் பிறந்து மறைந்த பிரபல வக்கீல் என்.டி.வானமாமலை, 7 உயர்நீதிமன்ற நீதிபதிகளை உருவாக்கிய பெருமைக்குரியவர். அவரைப்போல பல திறமையானவர்கள் உள்ள ஊர் நாங்குநேரி என புகழாரம் சூட்டினார்.

Related Stories: