செங்கோட்டை, வடகரை, களக்காட்டில் 220 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

செங்கோட்டை, ஜன. 11:  செங்கோட்டை, வடகரை, களக்காட்டில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 220 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், துப்புரவு அலுவலர் வெங்கடேசன், துப்புரவு ஆய்வாளர் மகேஸ்வரன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் முத்துமாணிக்கம், மாரியப்பன், தூய்மை இந்தியா திட்ட பணியாளர் முகமது புகாரி ஆகியோர் செங்கோட்டையில் உள்ள ஜவுளி, பலசரக்கு கடைகள் மற்றும் ஓட்டல்கள்  உள்ளிட்டவற்றில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 200 கிலோ தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதுபோன்று பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என வியாபாரிகளுக்கு அறிவுறுத்திய அதிகாரிகள், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதேபோல் வடகரை பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் தலைமையில் துப்புரவு மேற்பார்வையாளர் முருகன் மற்றும் வரி வசூலர், பணியாளர்கள்கள் ஓட்டல்கள், பலசரக்கு கடைகள், வணிக நிறுவனங்களில் அதிரடி ஆய்வு நடத்தினர். இந்த சோதனையின்போது 20 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை விதிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது, மீறினால் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். களக்காடு பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுஷ்மா தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு மற்றும் அலுவலர்கள் களக்காடு பஜாரில் கடை, கடையாக சென்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? என சோதனையிட்டனர். ஒரு சில கடைகளில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

Related Stories: