வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனையில் பார்மசிஸ்ட்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

வேலூர், ஜன.11: வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனையில் பார்மசிஸ்ட்கள் பற்றாக்குறையால் நேற்று மருந்து வாங்க வந்த நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனையில் தினமும் பல்வேறு நோய்களுக்கு ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மேலும் புறநோயாளிகள் பிரிவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருந்துகளை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இங்கு பணியாற்றி வந்த பார்மசிஸ்ட்களை டெபுடேஷன் என்று கூறி வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பியுள்ளதால் இங்கு பிற பணியாளர்களை கொண்டு மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கினர். இதனால் நோயாளிகள் நீண்ட கியூவில் பல மணிநேரம் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், ‘பெரும்பாலும் ஏழைகள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வந்து செல்கிறோம். இந்நிலையில், மருந்துகளை வாங்குவதற்காக பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நீடிக்கிறது. மேலும் நர்சுகள் உட்பட மருத்துவமனையில் வேறு துறையில் பணிபுரிபவர்களும் மருந்துகளை வழங்குகின்றனர். இதுகுறித்து கேட்டால், பார்மசிஸ்ட்கள் இல்லாததால் தாமதமாக மருந்துகளை வழங்குவதாக தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலியாக உள்ள பார்மசிஸ்ட் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

இதுதொடர்பாக மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனையில், 24 மணிநேரமும் சுழற்சி முறையில் மருந்துகளை வழங்க குறைந்தபட்சம் 6 பார்மசிஸ்ட்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், 4 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு பார்மசிஸ்ட் வேறு இடத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து கடந்த மாதம் மேலும் ஒரு பார்மசிஸ்ட் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு பணியிடமாற்றம் செ்யயப்பட்டார். தற்போது 2 பார்மசிஸ்ட்கள் மட்டுமே பணியில் இருக்கின்றனர். இதில் பார்மசிஸ்ட்களுக்கு வாரத்துக்கு ஒருநாள் விடுப்பு அளிக்கப்படுவது அவசியம். அதன்படி, வாரத்தில் 2 நாட்கள் ஒரே ஒரு பார்மசிஸ்ட் மட்டுமே பணியில் இருக்கின்றனர். இதனால், நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. விரைவில், புதிய பார்மசிஸ்ட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Related Stories: