×

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி மீண்டும் தொடங்கியது

திருவண்ணாமலை, ஜன.11: திருவண்ணாமலை மாவட்டத்தில், பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுச் சென்றனர். தமிழகம் முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத்துண்டு மற்றும் தலா 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

கடந்த 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. விடுபட்டவர்களுக்கு வரும் 13 மற்றும் 14ம் தேதிகளில் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு குறித்த தகவல் வெளியானதும், ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதை தற்காலிமாக நிறுத்தப்பட்டது. எனவே, வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இந்நிலையில், அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வறுமைக் கோட்டின்கீழ் உள்ளவர்கள் என்ற அடிப்படையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. மேலும், சர்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டைகள் மற்றும் எந்த பொருட்களும் வேண்டாம் என்ற குடும்ப அட்டைகளுக்கு மட்டும் பொங்கல் பரிசுத் தொகை ஆயிரம் ரூபாய் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1,627 ரேஷன் கடைகளிலும் நேற்று வழக்கம்போல பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி மீண்டும் தொடங்கியது. அதையொட்டி, நேற்று காலையில் இருந்தே ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள், பொங்கல் பரிசுத் தொகுப்புகளை பெற்றுச் சென்றனர்.

மீண்டும் ஏதேனும் புதிய அறிவிப்புகள் வெளியாகி, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சத்தின் காரணமாக, ரேஷன் கடைகளில் பொதுமக்களின் வருகை நேற்று வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. அதனால், மதிய உணவு நேர இடைவெளிகூட இல்லாமல் பெரும்பாலான ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட்டது.

Tags : Thiruvannamalai district ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...