கலெக்டர் தகவல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வீடு தேடிவரும்

திருவண்ணாமலை, ஜன.11: மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை இனி வீட்டிற்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறைதீர்வு தீர்வு கூட்டத்தில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவில் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் உட்பட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது.

பசுமை குடியிருப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாட்கள் வேலை முடிந்த பின்னரும், தொடர்ந்து பணி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி அல்லாத சிலருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான 100 நாள் வேலைத்திட்ட அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும். ரேஷன் கடைகள், வங்கிகளில் மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை அவர்களது வீட்டிற்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதைத்தொடர்ந்து, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசுகையில், `மாற்றுத்திறனாளிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். அவர்களுக்கான உதவித்தொகையை வீட்டிற்கே சென்று வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடைகளில் இனி வரிசையில் காத்திருக்க வேண்டாம். உங்களுக்கான தனி வரிசை ஏற்படுத்தப்படும். இந்த நடைமுறை நாளை முதல் அமல்படுத்தப்படும். மேலும், பசுமை வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றியதையடுத்து, அனைவரும் கை தட்டி கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர். இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு விசாரணை நடத்தினார்.

× RELATED சுதந்திரமாக செயல்பட முடியவில்லை;...