திருவண்ணாமலையில் பொது அறிவு வினாக்களுக்கு விடையளித்து அசத்தும் யுகேஜி மாணவி

திருவண்ணாமலை, ஜன.11: திருவண்ணாமலையில் பொது அறிவு வினாக்களுக்கு பதில் அளித்து அசத்தும் யுகேஜி மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்று கலெக்டர் கந்தசாமி பாராட்டி பரிசு வழங்கினார். திருவண்ணாமலை சாரோன் பகுதியைச் சேர்ந்தவர் குமார்(50). எலக்டரிக்கல் கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி சுப(40). அரசு பள்ளி ஆசிரியர். இவர்களது மூத்த மகள் ஸ்ருதி(21), திருமணமாகிவிட்டது. மகன் சுதர்சன்(18). பிஇ படிக்கிறார். இளைய மகள் நிகிதா(4). திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார்.

இந்நிலையில், மாநிலங்களின் பெயர்கள், உலக நாடுகளின் பெயர்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் உள்ளிட்ட பொது அறிவு வினாக்களுக்கு, சிறுமி நிகிதா சரளமாக பதில் அளிக்கும் வீடிேயா காட்சிகள், வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது. அதில், தன்னுடைய வீட்டில் உள்ள சிறிய நூலகத்தில் உள்ள ஆங்கில புத்தகங்களை பிழையின்றி வாசிப்பதும், அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. மேலும், இவற்றையெல்லாம் திருவண்ணாமலை கலெக்டரிடம் சொல்ல வேண்டும் என்ற ஆசையையும் வெளிபடுத்தியிருந்தார்.

இந்நிலையில், இந்த வீடியோ காட்சிகளை பார்த்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, நேற்று மாலை சாரோன் பகுதியில் உள்ள சிறுமி நிகிதாவின் வீட்டுக்கு நேரில் சென்றார். தன்னுடைய வீட்டுக்கு நேரில் கலெக்டர் வந்ததால், சிறுமி நிகிதா உற்சாகமடைந்தார். அதைத்தொடர்ந்து, நிகிதா பயன்படுத்தும் அவரது வீட்டில் உள்ள சிறிய நூலகத்தை கலெக்டர் பார்வையிட்டார். உலக நாடுகளின் பெயர்கள், அந்தந்த நாடுகளின் தேசிய கொடிகள் போன்றவற்றுக்கு, நிகிதா தௌிவாக பதில் அளித்து வியக்க வைத்தார். பின்னர், சிறுமி நிகிதாவுக்கு பரிசுகள் வழங்கி கலெக்டர் பாராட்டினார்.

அப்போது, அவர் கூறுகையில், சிறுமியின் வீடியோவை சமூக வலைதளத்தில் பார்த்தேன். கலெக்டரை நேரில் பார்க்க வேண்டும் என்ற அவரது ஆசையை நிறைவேற்ற வீட்டுக்கு வந்தேன். படிப்பதை எளிதில் மனதில் பதிய வைக்கும் திறன் இந்த சிறுமியிடம் கூடுதலாக இருக்கிறது. எதிர்காலத்தில் உயர்ந்த நிலைக்கு வர வாழ்த்தினேன்'' என்றார்.

× RELATED மாணவியை கேலி செய்த வாலிபர் கைது