காரைக்குடியில் இருந்து பேராவூரணி வழியாக பட்டுக்கோட்டைக்கு தினசரி ரயில் இயக்காததால் பயணிகள் அவதி

பேராவூரணி, ஜன.10: காரைக்குடியிலிருந்து பேராவூரணி வழியாக பட்டுக்கோட்டைக்கு இயக்கப்படும் ரயிலை தினசரி இயக்க வேண்டுமென பொதுமக்களும் ரயில்வே பயனாளிகள் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது.தென்னக ரயில்வே துறையில் காரைக்குடி- பேராவூரணி வழி மயிலாடுதுறை வரையிலான ரயில்பாதை தவிர மற்ற எல்லா தடங்களும்  அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காரைக்குடி-அறந்தாங்கி- பேராவூரணி-பட்டுக்கோட்டை-திருத்துறைப்பூண்டி-திருவாரூர் வழி மயிலாடுதுறை ரயில்பாதையை மற்ற இடங்களைப்போல அகல ரயில்பாதையாக மாற்ற வேண்டுமென்ற பொதுமக்கள், வர்த்தகர்கள், சமூக நல அமைப்புகள், ரோட்டரி மற்றும் லயன்ஸ் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து காரைக்குடி-அறந்தாங்கி-பேராவூரணி வழி பட்டுக்கோட்டை வரையிலான 71 கி.மீ தொலைவிலான அகல ரயில்பாதை திட்டத்திற்கு   நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டது. இப்பாதையில் சிறிய மற்றும் பெரிய ரயில்வே பாலங்கள் 44 இடங்களில் அமைந்துள்ளது.

இதனுடைய ஒப்பந்தப்புள்ளி பாதை அமைப்பு, பாலம் கட்டுதல், கட்டிடங்கள் அமைத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளாக தனித்தனியாக விடப்பட்டது. இதையடுத்து கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் இப்பாதையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஜனவரி 2012ம் ஆண்டு பழைய ரயில்பாதை பிரிக்கப்பட்டு, 2013ம் ஆண்டு இப்பாதைக்கான முதல் தொடக்க கட்ட பூமி பூஜை நடைபெற்றது.   ரயில்பாதை பணிகள் நிறுத்தப்பட்டுள்ள காரணத்தால் பல்வேறு பணிகளுக்காக பேராவூரணியிலிருந்து  சென்னைக்கு செல்லும் பொதுமக்கள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் ஆம்னி பஸ்களுக்காக கூடுதலான தொகை செலவிட வேண்டி உள்ளது. அதேபோல் காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு படிக்க செல்லும் மாணவ, மாணவியர் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே ரயில்வே அமைச்சகம் விரைந்து போதிய நிதி ஒதுக்கீடு செய்து காரைக்குடி- திருவாரூர் அகல ரயில்பாதை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்ைக விடுத்தனர்.

இதையடுத்து முதல் கட்டமாக காரைக்குடி-பட்டுக்கோட்டை வழித்தடத்தில் திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் நாளொன்றுக்கு இருமுறை மட்டும் ரயில் சேவை மார்ச் மாதம் தொடங்கி இடையில் நிறுத்தப்பட்டும்  நடைபெற்று வருகிறது. இதனை தினசரி 4 முறை இயக்க வேண்டும் என பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்கம், தென்னக ரயில்வே பொது மேலாளர், கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து ரயில்வே பயனாளிகள்  சங்க நிர்வாகிகள் மெய்ஞானமூர்த்தி, பழனிவேல், கணேசன், கிருஷ்ணன், பாரதிநடராஜன் ஆகியோர் கூறியதாவது:

பேராவூரணி பகுதி பொதுமக்களுக்கு பெரிதும் பயன்பட்டு வந்த ரயில் சேவை அகல பாதை பணிகளால் தாமதமடைந்து வருகிறது. எனவே பட்டுக்கோட்டை-திருவாரூர் இடையேயான பணிகளை விரைந்து முடித்து, காரைக்குடி-சென்னை பயணிகள் ரயில் சேவையை விரைந்து தொடங்க வேண்டும். தற்காலிக ஏற்பாடாக காரைக்குடியிலிருந்து பேராவூரணி வழியாக  பட்டுக்கோட்டைக்கு ஏற்கனவே இருந்தது போல, தினசரி சேவை தொடங்கி, ரயிலை 4 முறை இயக்க வேண்டும் எனக் கூறினர்.

Related Stories: