பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, ஜன. 10: பொதுவேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சையில் அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அனைவருக்கும் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.18,000 நிர்ணயம் செய்ய வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும். மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை பனகல் கட்டிடம் முன் அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை வட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் கோதண்டபாணி முன்னிலை வகித்தனர்.
 
மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி துவக்கி வைத்தார். பொது வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது. காலதாமதமின்றி கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். அரசு வேலைக்கு 33 பாடப்பிரிவுகள் தகுதியில்லை என்று அறிவித்ததை திரும்பபெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் வகுப்புகளை புறக்கணித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கும்பகோணம்: கும்பகோணம் பேருந்து நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  இதையடுத்து 190 பேர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

× RELATED அரசு ஊழியர்களும் சரியான நேரத்துக்கு...