அரசு பேருந்து மோதி இறந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.13 லட்சம் நஷ்டஈடு தஞ்சை கோர்ட் உத்தரவு

தஞ்சை, ஜன. 10: ஜெயங்கொண்டம் அருகே அரசு பேருந்து மோதி இறந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.13 லட்சத்து 900 நஷ்டஈடு வழங்க தஞ்சை கோர்ட் உத்தரவிட்டது. கும்பகோணம் அருகே மேலதிருவாகுறிச்சியை சேர்ந்த சின்னதம்பி மகன் லட்சுமணன் (25). விவசாயியான இவர் டிராக்டர் வைத்து வேலை செய்து வந்தார். 2017ம் ஆண்டு மே 25ம் தேதி லட்சுமணன், ஜெயங்கொண்டம் சென்றிருந்தார். அங்கிருந்து மீண்டும் கும்பகோணம் வருவதற்காக காராகுறிச்சி என்ற இடத்தில் அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டத்துக்கு சொந்தமான பேருந்தில் ஏறினார். ஆனால் அதற்குள் பேருந்தை ஸ்டார்ட் செய்ததால் தடுமாறி விழுந்த லட்சுமணன் மீது பஸ்சின் முன்பக்க சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து தனது மகன் இறப்புக்கு நஷ்டஈடு கேட்டு தஞ்சை மாவட்ட மோட்டார் வாகன விபத்து கோருரிமை தீர்ப்பாய நீதிமன்றத்தில் சின்னதம்பி வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்து ரூ.13,90,800 வழங்க விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்துக்கு நீதிபதி பூர்ணஜெயஆனந்த் உத்தரவிட்டார். பேருந்து டிரைவர்: திருவையாறு அருகே உள்ள வேதியாபுரத்தை சேர்ந்தவர் சேகர் (48). இவர் சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். தனது சொந்த ஊருக்கு வந்த சேகர், 2017ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி மணக்கரம்பை நால்ரோட்டில் பேருந்தில் ஏற நின்றார்.

திருவையாறில் இருந்து தஞ்சை நோக்கி வந்த தனியார் ேபருந்தில் ஏற முயன்றபோது புறப்பட்டது. இதில் தடுமாறி விழுந்த சேகர் படுகாயமடைந்தார். இதையடுத்து தனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு இழப்பீடு கேட்டு தஞ்சை மோட்டார் வாகன விபத்து கோருரிமை தீர்ப்பாய நீதிமன்றத்தில் சேகர் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்து ரூ.5,26,373 நஷ்டஈடாக வழங்க தஞ்சை தனியார் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நீதிபதி பூர்ணஜெயஆனந்த் உத்தரவிட்டார். கூலி தொழிலாளி: திருவையாறு அருகே நாகத்தியை சேர்ந்தவர் ஆறுமுகம் (58). கூலி தொழிலாளியான இவர் 2017ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி அம்மன்பேட்டை நால்ரோட்டில் நின்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் ஆறுமுகம் காயமடைந்தார். தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு நஷ்டஈடு கேட்டு தஞ்சை மோட்டார் வாகன விபத்து கோருரிமை தீர்ப்பாய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதி பூர்ணஜெயஆனந்த் விசாரித்து ரூ.3,50,635 நஷ்டஈடு வழங்க தஞ்சை தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு நேற்று உத்தரவிட்டார்.

Related Stories: