தலைவாசலில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் நிறுத்தப்படுவதால் விபத்து அபாயம் பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஆத்தூர், ஜன.10:  சேலம் மாவட்டம் தலைவாசல் பேருந்து நிலையம் இருந்தபோதும், சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால் பேருந்தில் இருந்து இறங்கி வரும் மக்கள் விபத்தில் சிக்குகின்றனர். ஆத்தூர், சேலம் மார்க்கத்தில் செல்லும் பேருந்துகளும் பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலையிலேயே நிற்கிறது. பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள சர்வீஸ் சாலையில் உள்ள பயணிகள் நிழற்கூட பகுதிக்கு செல்லாமல் சாலையிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால் பயணிகள் தேசிய நெடுஞ்சாலையில் காத்திருக்க வேண்டிய நிலையும், கடந்து செல்ல வேண்டிய நிலையும் உள்ளதால் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர்.

 இதுகுறித்து தலைவாசல் பகுதி மக்கள் கூறியதாவது; எங்கள் கிராமத்தில் உள்ள பேருந்து நிலையம் பெயருக்கு தான் உள்ளது. அங்கு எந்த பேருந்தும் செல்வது கிடையாது. சில மினி பேருந்துகளும், டவுன் பஸ்களும் தான் வந்து செல்கின்றன. சென்னை மார்க்கத்தில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நெடுஞ்சாலையில் நிறுத்தப்படுவதால் பயணிகள் ஏறி, இறங்கி சாலையினை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால் அடிக்கடி விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது.  பலமுறை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும், போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுக்கப்பட்ட போதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஏதாவது பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டால் அன்றிலிருந்து சில நாட்களுக்கு உள்ளூர் போலீசார் சாலையில் பேருந்துகளை நிறுத்த விடாமல் செய்வார்கள். அதன்பின் வழக்கமாக தான் பேருந்து ஓட்டுனர்கள் செயல்படுகிறார்கள். தலைவாசலில் தினசரி சந்தைக்கு ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்லும் நிலையில் பேருந்துகள் இவ்வாறு நிறுத்தப்படுவதால் தினமும் விபத்தில்லா நாள் இல்லை என்ற அளவிற்கு உள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தலைவாசல் பேருந்து நிலையப்பகுதியில் உள்ள இணைப்பு சாலையில் ரவுண்டனா ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் விபத்துகள் ஏற்பாடமல் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

× RELATED விஷால் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்