ஆயிரம் ரூபாய் வழங்க நீதிமன்றம் கட்டுப்பாடு ரேஷன் கடைகளில் அலைமோதிய கூட்டம்

ஆட்டையாம்பட்டி, ஜன.10:  பொங்கல் பரிசு ெதாகுப்புடன், ₹1000 வழங்க உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தததால், ரேஷன் கடைகளில் கூட்டம் அலைமோதியது. வயதானவர்கள் அவற்றை பெற முடியாமல் மயங்கி விழுந்தனர்.  தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையையொட்டி, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், உலர்திராட்சை போன்றவற்றுடன், ₹1000 ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. பெரும்பாலான மாவட்டங்களில் நேற்றில் இருந்து தான் பொங்கல் பரிசு தொகுப்பு, பணம், வேட்டி, சேலை உள்ளிட்டவை வழங்கும் பணி தொடங்கியது. பொருட்களையும், பணத்தையும் வாங்க ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர்.

 இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், தங்களுக்கு கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற பயத்தில் முண்டியடித்துக்கொண்டு ரேஷன் கடைகளில் புகுந்ததால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள பல முதியவர்கள் பணத்தை பெற முடியாமல் மயங்கி கீழே விழுந்தனர். சரியான போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் கூட்ட நெரிசல் காலை முதல் இரவு வரை நீடித்தது.  ஆட்டையாம்பட்டியில், வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி, பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதாக இருந்தது. திடீரென உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவால் அவர் தொடங்கி வைக்க வரவில்லை. நேற்று ஆட்டையாம்பட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கட்டுப்படுத்த முடியாத வண்ணம் மக்கள் திரண்டிருந்தனர். சில கடைகளில் பரிசு தொகுப்பு வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

மேலும் ஓரிரு கடைகளில் ஸ்மார்ட் கார்டு ஸ்கேனிங் செய்யும் கருவி பழுதானதாலும், மெதுவாக இயங்கியதாலும் அவதிநிலை தொடர்ந்தது. பொங்கல் பண்டிகை வரையில் ரேஷன் கடைகளில் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். முதியவர்கள் சிரமப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆத்தூர்: ஆத்தூர் தாலுகாவில் 146 ரேஷன் கடைகளில், 88 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மஞ்சினி கிராமத்தில் எம்எல்ஏ சின்னதம்பி நுகர்வோர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ரஞ்சித்குமார், முன்னாள் தலைவர் சேகர், கூட்டுறவு சங்க தலைவர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் நரசிங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள ரேஷன் கடையில் முன்னாள் மாநில மத்திய கூட்டுறவு வங்கி  தலைவர் இளங்கோவன் பரிசு பொருள் தொகுப்பை வழங்கினார். நிகழ்ச்சியில் சங்க தலைவர் மணிவண்ணன், தியாகு, சிலார்கான், சுரேஷ் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு கடையிலும் காலை 7 மணியிலிருந்தே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருருந்தனர். அதிமுக பிரமுகர்கள் வந்த பின்னரே பொருட்கள், பணம் வழங்கப்பட்டது. மேலும், ரேஷன் கடை முன்பு சாமியானா பந்தல் போட்டு மைக்செட் கட்டப்பட்டிருந்தது. நேற்று மாலை 6 மணி வரையில் 40 ஆயிரம் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  ஓமலூர்: காடையாம்பட்டி வட்டாரத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் துவக்கி வைத்தார். செம்மாண்டப்பட்டி, தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதி கடைகளிலும் அவர் துவக்கி வைத்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பல்பாக்கி கிருஷ்ணன், சிவபெருமாள், செம்மாண்டப்பட்டி கூட்டுறவு சங்க தலைவர்  சித்தேஸ்வரன், காடையாம்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கெங்கவல்லி: கெங்கவல்லி தாலுகாவில் 52,835 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இங்குள்ள 84 ரேஷன் கடைகளில் நேற்று காலை முதல் ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை பெற மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒருவருக்கொருவர் முண்டியடித்ததால் நெரிசலில் சிக்கி பலர் அவதிக்குள்ளாகினர். புனல்வாசல், கெங்கவல்வி, வலசலக்கல்பட்டி, கூடமலை, நாடுலூர் உள்ளிட்ட ரேஷன் கடைகளில் மக்கள் திரண்டதாலும், பணம் இல்லாததாலும் கடை மூடப்பட்டது. இதனிடையே உயர்நீதிமன்ற தீர்ப்பை கேள்விப்பட்டு மக்கள் திரளாக வந்ததால் போலீசார் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த கடும் சிரமப்பட்டனர். காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை பொருட்கள் விநியோகம் தொடர்ந்தது.

× RELATED ரூ.4,100 அபராதம் வசூலிப்பு செந்துறையில்...