ஓமலூர் பேருந்து நிலையத்தில் திருநங்கைகளுக்காக கட்டிய கழிவறை திறக்க வலியுறுத்தல்

ஓமலூர், ஜன.10: சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில், இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்கு என தனியாக ₹2 லட்சம் ரூபாய் செலவில் கழிவறை, குளியலறை கட்டப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.  ஓமலூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். வெளியூரில் இருந்து ஓமலூர் பகுதிக்கு வரும் திருநங்கைகள் பயன்பெறும் வகையில் பேருந்து நிலையத்தில் தனியாக கழிப்பிடம் கட்டப்பட்டது. மின்சாரம், தண்ணீர் வசதி ஆகியவை செய்து கொடுக்கப்பட்டது. கட்டப்பட்டு ஓராண்டாக திறக்கப்படாமல் உள்ளதாக தினகரனில் சுட்டிக்காட்டியதையடுத்து, ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் திறந்து வைத்தார். அதன்பின் மீண்டும் பூட்டப்பட்டது.

ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை திறக்கபடாமலே உள்ளது. திருநங்கைகள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், இந்த கழிப்பிடத்திற்கு வழங்கப்பட்டிருந்த மின்சார இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த கழிப்பிடத்தை பயன்படுத்த முடிவதில்லை. இதனால், ஒமலூர்பகுதிக்கு வரும் திருநங்கைகள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு சிரமப்படுகின்றனர். மாவட்ட கலெக்டர் உடனடியாக திருநங்கைகளின் நலன் கருதி அவர்களுக்கென கட்டப்பட்ட கழிவறை, குளியலறையை திறக்க வேண்டும் என ஓமலூர் பகுதி திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: